aangal ‘ஜெய்பீம்’ பட சர்ச்சையையொட்டி நடிகர் சூர்யாவுக்கு எதிராக அனல் கக்கிவந்த பா.ம.க., சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்துக்கு எதிராகவும் தடதடக்க ஆரம்பித்தது. ஆனால், ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெற்றிப்படமாகியுள்ள சூழலில், பா.ம.க-வின் போராட்டம் தணிந்துபோனது குறித்து பா.ம.க பொருளாளர் திலகபாமாவிடம் கேட்டோம்….
” ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை திரையிட விடமாட்டோம் என கருத்து சுதந்திரத்துக்கு எதிராக பா.ம.க விடுத்துவரும் மிரட்டலுக்கு பணிந்துவிடக் கூடாது என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கேட்டுள்ளதே?”
”கருத்துரிமை என்பதும் சுதந்திரம் என்பதும் அடுத்தவர் மூக்கு நுனி வரைதான். அதைப் புரிந்துகொள்ளாமல், கருத்துரிமை என்ற பெயரில், யாரும் என் மூக்கைத் தொட்டுவிட்டால் அது கருத்துரிமை அல்ல… கருத்து மீறல்! நாங்கள் அடிக்கத்தான் செய்வோம்!”
”அதனால்தான் ‘ஜெய்பீம்’ பட சர்ச்சையின்போது, ‘சூர்யாவை உதைப்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு’ என்று அறிவித்த பா.ம.க நிர்வாகியை பா.ம.க தலைமை கண்டிக்கவில்லையா?”
”ஜெய்பீம் படத்தில், சாதி பற்றிய சர்ச்சையை முதலில் உருவாக்கியது யார்? ஏன் அவர்களைப் பற்றி யாருமே கேள்வி கேட்கமாட்டோம் என்கிறீர்கள்?
எங்கள் சாதியைப் பற்றிய தவறான செய்தியை நீங்கள் பரப்பிவிட்டீர்கள் என்றால், ‘அது உண்மை இல்லை’ என்று நாங்கள் நிரூபிப்பதற்கு சாதியைப் பற்றிப் பேசித்தானே ஆகவேண்டும்.
தி.மு.க-வின் தலைவர்கள் யார், யார், எங்கெங்கு என்னென்ன பேசியிருக்கிறார்கள் என்ற பட்டியலை நான் எடுத்துத் தரவா? எனவே, தனி மனித ஒழுக்கக்கேடுகளைக் கொண்டுவந்து பா.ம.க-வின் கருத்தாக சேர்க்காதீர்கள்.”
”சாதி, மத பாகுபாடின்றி கல்விச் சேவை செய்துவரும் நடிகர் சூர்யா, குறிப்பிட்ட சாதிக்கு எதிரானவர் என்று எப்படிக் குற்றம் சாட்டுகிறீர்கள்?”
”ஒரு படம் வெற்றியடையும்போது, அதற்கான முழு பெருமையும் அந்தப் படத்தின் கதாநாயகனை போய்ச் சேருகிறது. அதுவே, அந்தப் படத்தில் இதுபோல் ஒரு தவறான செய்தி பதிவாகியிருக்கிறது என்றால், அதற்கான பொறுப்பையும் படத்தின் கதாநாயகன்தானே ஏற்றுக்கொள்ள வேண்டும்!
தெரியாமல் ஒருவர் காலை மிதித்துவிட்டால்கூட, ‘மன்னித்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்கிறோம்தானே… அதைப்போல், சூர்யா அறியாமலேயே ஜெய்பீம் படத்தில் தவறு நிகழ்ந்துவிட்டது என்றால், ‘மன்னிப்பு கேட்டாக வேண்டும்’ என்ற உணர்வு ஏன் இன்னும் சூர்யாவுக்கு வரவில்லை என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.”
”ஆனால், ‘நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை பா.ம.க பலமாக எதிர்க்கவில்லை; சூர்யாவைக் கண்டு பா.ம.க பயந்துவிட்டது’ என்ற விமர்சனம் தற்போது எழுந்துள்ளதே?”
”ஜெய்பீம் படத்தில், வன்னியரை வில்லனாக சித்திரித்ததற்கு சூர்யா பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனாலும் அவர் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. அதேசமயம், தேவையற்ற விஷயங்களில் நம் சக்தியை வீணடிக்கவேண்டாம் என்று எங்கள் கட்சி தலைமை எங்களுக்கு அறிவுறை கூறியதால், நாங்கள் தற்போது அமைதி காத்துவருகிறோம்.
‘வரதட்சணை வாங்கக் கூடாது’ என்று ஊரெல்லாம் பரப்புரை செய்வார்கள். அதுவே, ‘நான் வரதட்சணை வாங்கமாட்டேன்’ என்று சொல்லி ஒருவர் பெண் கேட்டு வந்தால், ‘இவருக்கு வியாதி எதுவும் இருக்குமோ…’ என்று சந்தேகப்படுவார்கள். அதைப்போல், ‘பா.ம.க-வைப் பார்த்து பயப்படுகிறீர்களா’ என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?
நெய்வேலியில், மண்ணின் மைந்தர்களுக்கு வேலை கொடுங்கள் என்று நாங்கள் போராடிவருகிறோம். பள்ளிக்கூட குழந்தை மர்மமான முறையில் செத்துப்போகிறது. குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறியும் முன்னரே, ஆளுங்கட்சியினர் துணையோடு குழந்தையின் உடலை அவசர அவசரமாக புதைக்கிறார்கள். அதை எதிர்த்தும் போராடுகிறோம். இவ்வளவுக்கும் மத்தியில், திரைப்படத்திலும் எங்கள் சாதியை தவறாக சித்திரித்து படம் எடுக்கிறார்களே என்று கொதித்துப்போய் போராட்டம் செய்கிறோம். சமூகம் சார்ந்த எங்கள் போராட்டங்கள் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாத ஊடகம், திரைப்படம் சார்ந்த எங்கள் போராட்டத்தை மட்டும் ஊதி ஊதி பெரிதாக்குவது ஏன்?”
”சமூக நீதிக்கு குரல் கொடுப்பதாக சொல்லிவரும் பா.ம.க., திரைப்படத் துறையினரையும் எதிர்த்துப் போராட்டங்கள் நடத்திவருவதை என்னவென்று புரிந்துகொள்வது?”
”ஒரு தவறான விஷயம் வெளிவருகிறதென்றால், அதைக்கண்டும் காணாமல் இருப்பது வன்முறையைவிடவும் மோசமானது. எனவே அறச்சீற்றம் கொள்ளவேண்டும். அதைத்தான் பா.ம.க-வும் மேற்கொண்டது.
இதுவே பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை இவர்கள் திரைப்படமாக எடுத்திருந்தால், அந்தச் சம்பவத்தின் பின்னே இருந்த அ.தி.மு.க-வினர் குறித்து தைரியமாக உண்மையைச் சொல்வார்களா?
இந்த விஷயத்தில் கலையுலகத்தைச் சேர்ந்த சிலரை தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு தி.மு.க சாமர்த்தியமாக காய் நகர்த்தி வருகிறது! இந்த சதித்திட்டத்தை தெரிந்துகொண்டதால்தான், சூர்யாவுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை அறவழியில் மேற்கொண்டு வருகிறோம்.”
” ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்துக்கும் தி.மு.க-வுக்கும் என்ன சம்பந்தம்?”
”நான் இந்தப் படத்தைச் சொல்லவில்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக ‘ஜெய்பீம்’ என்றொரு படத்தில், வன்னியரை வில்லனாக சித்திரித்து படம் வெளியிட்டவர்கள் யார்? அவர்கள் யாருடைய அபிமானிகள், அவர்களுடைய நோக்கம் என்ன? ஆக, தேர்தலுக்கு முன்பாக, மக்களின் உளவியலை எப்படி மாற்றுவதென்ற இந்தக் கலை தி.மு.க-வுக்கு ரொம்ப நன்றாகவே தெரியும்!
அந்தவகையில், ‘பா.ம.க-வினரை எங்கே தொட்டால், அவர்கள் கோபமடைவார்கள்’ என்பதைத் தெளிவாக தெரிந்துவைத்துள்ள தி.மு.க., வேண்டுமென்றே வன்னியர்களைத் தூண்டிவிட்டு, இந்த சமூகத்தையே ‘வன்முறையாளர்கள்’ என கெட்டப்பெயர் ஏற்படுத்த நினைக்கிறது தி.மு.க. இதெல்லாம் தெரிந்ததால்தான், எங்கள் கட்சித் தலைமை, எங்களை இப்போது அமைதி காக்கச் சொல்லியிருக்கிறது.
நடந்த கதையை உண்மையாக அப்படியே திரையில் எடுத்துக்காட்டுவது ஒருவகை அல்லது புனைவோடு எடுத்துக்காட்டுவது இன்னொரு வகை. ஆனால், ஜெய் பீம் படத்தில், உண்மையும் இல்லாமல் புனைவும் இல்லாமல் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு வன்னியர்களை வன்முறையாளர்களாக சித்திரித்திருந்தார்கள்.
உண்மையில் பழங்குடிகளின் உரிமைகளுக்காக போராடி வருகிற கட்சி பா.ம.க. ஆனால், ஜெய்பீம் படத்திலோ அந்தச் சமூகத்துக்கு எதிரியாக வன்னியரை சித்திரித்துவிட்டு, ‘அது தானாக நிகழ்ந்துவிட்டது’ என்று சொன்னால், அதை யார்தான் நம்புவார்கள்?”
”நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
”இந்தத் தேர்தலில், தி.மு.க வெற்றி பெற்றுவிட்டதாக நீங்கள் நம்புகிறீர்களா? 11 பெண் மேயர்களைக் கொண்டுவந்திருக்கிறோம் என்று தி.மு.க பெருமைகொள்கிறது. ஆனால், இந்த 11 பெண்களும் சுயமாக முடிவெடுத்து செயல்படுவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலேயேயும் தி.மு.க-வினரே அத்துமீறி போட்டியிட்டனர். இதையெல்லாம் அவர்கள் கட்சித் தலைமையே கண்டித்தபிறகும்கூட, ‘இல்லையில்லை நான் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வென்றிருக்கிறேன்…. ராஜினாமா பண்ண முடியாது’ என்று பதவியில் நீடித்துக்கொண்டிருக்கிறார்கள்.”
”தேர்தலில், பா.ம.க-வின் தோல்விக்கு காரணம் என்ன?”
”உள்ளாட்சித் தேர்தல் என்றாலே அது ஆளுங்கட்சிக்கு சாதகமாகத்தான் இருக்கும். அதிலும் ‘வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்துத்தான் இந்த கவுன்சிலர் பதவியை வென்றிருக்கிறேன்’ என்று வெற்றிபெற்றவர்கள் வெளிப்படையாக சொல்லுகின்ற நிலையிலும்கூட, தேர்தல் ஆணையம் கை கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்க்கும் நிலைமைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்தக் கூத்தையெல்லாம் எப்படி தேர்தல் வெற்றி என்று மார் தட்டிக்கொள்ள முடியும்?
பா.ம.க எப்போதுமே கிராமப்புறங்களில் வலுவாக இருக்கிற கட்சி. எனவே கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், பரவலான வெற்றியைப் பெற்றிருந்தோம். நகர்ப்புற தேர்தலைப் பொறுத்தவரையில் எங்களுக்கு கொஞ்சம் தடுமாற்றம் இருந்ததுதான். ஆனால், அதையும் தாண்டி குறிப்பிடத்தக்க வெற்றியை நாங்கள் பெற்றிருக்கிறோம். கன்னியாகுமரி, கும்மிடிப்பூண்டி போன்ற இடங்களிலும்கூட புதிதாக காலூன்றியிருக்கிறோம். காரணம் எங்கள் கட்சித் தலைமை சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு, கட்சிக்காக உயிரையே கொடுக்கிற அளவில் பாட்டாளி சொந்தங்கள் எங்கள் கட்சியில் இருக்கிறார்கள். எனவே, இப்போது கிடைத்திருப்பதையே மிகப்பெரிய வெற்றியாகத்தான் நாங்கள் நினைக்கிறோம்.”