டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடா நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு இந்தியாவில் 4,200 கோடி டாலர் (சுமார் ரூ. 3.20 லட்சம் கோடி) முதலீடு செய்யப் போவதாக ஜப்பான் பிரதமர் அறிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடா, 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவருடன் ஜப்பானிய உயர்நிலை அதிகாரிகள் குழுவினரும் வந்துள்ளனர். ஜப்பான் பிரதமரை டெல்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார்.
இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பியுமியோ கிஷிடா நேற்று மாலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளின் நல்லுறவு, வர்த்தகம் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். இரு நாடுகள் இடையிலான கலாச்சார, பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்தும் விவாதித்தனர். மேலும், ரஷ்யா – உக்ரைன் விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்கு பிறகு இந்தியாவில் 4,200 கோடி டாலர் (சுமார் ரூ. 3.20 லட்சம் கோடி) முதலீடு செய்யப் போவதாக ஜப்பான் பிரதமர் அறிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் ஜப்பான் அறிவித்த ரூ. 3.20 லட்சம் கோடி முதலீடு மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சராக பியுமியோ கிஷிடா இருந்தபோது, பலமுறை இந்தியா வந்துள்ளார். இவர், கடந்த ஆண்டு அக்டோபரில் ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்றார். பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக தற்போது அவர் டெல்லி வந்துள்ளார்.
டெல்லியில் நடந்த 14-வது இந்திய – ஜப்பான் ஆண்டு கூட்டத்தில் ஜப்பான் பிரதமர் பங்கேற்றார். இந்த கூட்டம் மூன்றரை ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, இந்தியாவில் 3.5 டிரில்லியன் ஜப்பான் யென் (2.10 லட்சம் கோடி) முதலீடு செய்வதாக அறிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த முதலீடு பல்வேறு திட்டங்களுக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.