உ.பி. சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 275 இடங்களை கைப்பற்றி பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. சுமார் 36 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடித்து பாஜக வரலாறு படைத்துள்ளது.
அதேபோல் பாஜக சார்பில்2-வது முறையாக பதவி ஏற்கும்முதல்வராக யோகி ஆதித்யநாத் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், லக்னோவில் உள்ள அடல் பிஹாரி அரங்கில் பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அரங்கில் வரும் 25-ம் தேதி மாலை 4.00 மணிக்கு விழா நடைபெறுகிறது.
விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா,பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங் கேற்கின்றனர். அத்துடன் பாஜக தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ், தோழமை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத்தின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாதுக்கள் நிறைந்த மாநிலம் என்பதால் உ.பி.யின் காசி, மதுரா மற்றும் அயோத்தியாவில் உள்ளசாதுக்களும் விழாவில் பங்கேற்கின்றனர்.
மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக எதிர்க்கட்சி தலைவர்கள் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோரும் அழைக்கப்பட உள்ளனர். இவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரியங்கா, ராகுலுடன் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், மேற்குவங்க முதல்வர் மம்தாவும் சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையில், உ.பி. அமைச்சரவையில் யார் யார் இடம் பெறவேண்டும், அவர்களுக்கான இலாகா ஆகியவற்றை முடிவுசெய்யும் பொறுப்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து ஆதித்யநாத்தும் ஆலோசனை நடத்தி உள்ளார். இவரது அமைச்சரவை 2024-ம்ஆண்டு வரவிருக்கும் மக்களவைதேர்தலையும் குறிவைத்து அமையஉள்ளது. கடந்த முறை பாஜக ஆட்சியில் 2 துணை முதல்வர்கள் இடம்பெற்றனர். உ.பி. மாநில தலைவராக இருந்து 2017-ல்பாஜக வெற்றிக்கு பாடுபட்ட கேசவ் பிரசாத் மவுரியாவும் துணை முதல்வராக இருந்தார். இந்த தேர்தலில் சிராத்து தொகுதியில் அவர் தோல்வி அடைந்ததால் துணை முதல்வர் பதவிகிடைக்காது என்று கூறப்படுகிறது. எனினும், மத்திய அமைச்சரவையில் மவுரியாவை சேர்க்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
மேலும், துணை முதல்வராக 3 பேரை நியமிக்கும் வாய்ப்பும் உள்ளதாக கூறுகின்றனர்.