1948 சுதந்திரத்துக்கு பிறகு முதன் முதலாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதால், அங்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து, மக்கள் சாலைகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கையில் காகிதத் தாள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், அந்த நாட்டு அரசு பள்ளித் தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது. நிதி பற்றாக்குறை காரணத்தால் தாள்களை அச்சிடவும், இறக்குமதி செய்ய முடியாமலும் இலங்கை அரசு பரிதவித்து வருவதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மாணவர்களுக்கு அடுத்த வாரம் நடைபெறவிருந்த தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் நாட்டில் உள்ள 4.5 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரசின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். “அரசாங்கத்தின் தவறான முடிவால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது இதில் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று கூறியிருக்கிறார்.