போபால்-தலைநகர் போபால் உட்பட மாநிலம் முழுதும் பரவலாக அனல் காற்று வீசுவதால், மத்திய பிரதேச அமைச்சரவை கூட்டம் குளுமையான மலைப் பிரதேசத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநில அமைச்சரவை கூட்டம் வழக்கமாக தலைநகர் போபாலில் நடக்கும்.இம்முறை போபால் உட்பட பல நகரங்களில் அனல் காற்று வீசுகிறது. இதையடுத்து வரும் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களும் நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள பச்மாரி மலைப் பகுதியில் அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது.
இதற்காக வரும் 25ம் தேதி மாலை முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் அனைத்து அமைச்சர்களும் பச்மாரி மலைக்கு செல்கின்றனர். அங்கு சுற்றுலா துறையின் நட்சத்திர ஹோட்டலில் தங்குகின்றனர். கூட்டம் முடிந்து 27ம் தேதி தலைநகர் போபாலுக்கு திரும்புகின்றனர்.சத்புரா மலைத் தொடரின் ராணி என அழைக்கப்படும் பச்மாரி மலையில் அருவிகள், புலிகள் சரணாலயம், தேசியப் பூங்கா உட்பட சுற்றுலா பயணியரை கவரும் பல இடங்கள் உள்ளன.
Advertisement