போபால்: போபாலில் சிறையில் கோயில் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை அடுத்து அங்குள்ள கொடூர குற்றங்களுக்கான தண்டனைக் கைதிகள் கவுரவமான மறுவாழ்வுக்கு தயாராகி வருகின்றனர்.
வாழ்க்கையில் ஏதோஒரு சூழ்நிலையில் சந்தர்ப்பவசத்தால் மனிதன் குற்றச் செயலில் ஈடுபடுபவனாக மாறுகிறான். ஆனால் வேறொரு சந்தர்ப்பம் அளித்தால் அவன் தன்னை நல்லவனாகவும் நிலைநிறுத்திக்கொள்ளமுடியும் என்கிறார்கள் போபாலில் இயங்கிவரும் காயத்ரி சக்திபீத் என்ற அமைப்பினர்.
இவர்கள் சிறையில் கொடூர குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வரும் கைதிகளையே நேரில் சென்று சந்தித்து பேசி அவர்களது கவுரவமான மறுவாழ்வுக்காக சில முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். வேத சடங்குகளில் ஆர்வமுள்ள, தண்டனை முடிந்து சமுதாயத்திற்கு நல்ல செய்தியை வழங்க விரும்பும் கைதிகளை அவர்கள் தேர்வு செய்தனர். தற்போது முதற்கட்டமாக மாதத்திற்கு சுமார் 50 கைதிகள் என்ற அளவில் ‘யுக் புரோஹித்’ பயிற்சியை அளிக்கத் தொடங்கியுள்ளனர்.
காயத்ரி சக்திபீத் அமைப்பின் உறுப்பினர் பேட்டி: இதுகுறித்து பேசிய காயத்ரி சக்திபீத் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் ஏஎன்ஐயிடம் பேசுகையில், “இந்த கைதிகள் சமூகத்தில் இருந்து விலக்கப்பட்டிருப்பதாக உணர்கிறார்கள். அதனால் மக்கள் நல்வாழ்வுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காக சடங்குகள் கற்பிக்கப்பட்டு நாங்கள் அவர்களுக்கு அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். அவர்கள் மனிதாபிமானம் மிக்கவர்களாகவும் நல்லொழுக்கமுள்ளவர்களாகவும் சமூகத்திற்குச் செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த அர்ச்சகர் பயிற்சி நடத்தப்பட்டது. மற்றவர்களைக் கவனித்துக்கொள்வதுதான் புரோஹித் என்பதன் அர்த்தம். தற்போதைக்கு இந்தப் பயிற்சியில் 50 கைதிகள் உள்ளனர், அவர்களிடம் பேசி அவர்களை தேர்வு செய்துள்ளோம். அவர்களின் தகுதி, கற்கும் திறன் மற்றும் சடங்குகளை கற்றுக்கொள்வதில் தீவிர ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் தேர்வு செய்துள்ளோம். பயிற்சி அமர்வு மார்ச் 28 அன்று முடிவடைகிறது,” என்றார்.
போபால் மத்திய சிறை கண்காணிப்பாளர்: போபால் மத்திய சிறை கண்காணிப்பாளர் தினேஷ் நர்காவே கூறுகையில், ”சிறைகளில் அடைபட்டிருக்கும் இவர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர். கைதிகள் தங்களைச் சுற்றியுள்ள நேர்மறை ஆற்றலை உணரும் வகையில் பயிற்சி கைதிகளின் தேவையை நாங்கள் உணர்ந்தோம். காயத்ரி குடும்பத்தினர் கைதிகளின் ஆன்மீக, அறிவுசார் மற்றும் தார்மீக மேம்பாட்டிற்காக பல நல்ல பணிகளை செய்துள்ளனர். அவ்வகையில் அவர்கள் இம்முறை 50-60 கைதிகளை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ஏழைகள், சுமாராக படித்தவர்கள் அல்லது அதிகம் படிக்காதவர்கள். மேலும் கற்கவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
கொலைசெய்ததாக தண்டனை அனுபவித்துவரும் சந்தீப் பவார் பேட்டி: இந்த அமர்வின் மூலம் மனிதர்களிடம் உள்ள தெய்வீகத் தன்மையையும், பரம்பொருளின் செய்தியையும் மக்களுக்கு உணர்த்த விரும்புவதாக கொலைக் குற்றத்தில் தண்டனை அனுபவித்து வரும் சந்தீப் பவார் தெரிவித்துள்ளார். “நான் கொலைக் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். என்னைப் போல பலருக்கும் ஆன்மீகக் கல்வி மற்றும் சடங்குகளுடன் அன்பு, தோழமை ஆகிய நற்பண்புகளைப் பிரச்சாரம் செய்ய கற்றுக் கொடுக்கப்படுகிறது. முன்பு நாங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தோம், ஆனால் பயிற்சிக்குப் பிறகு, ஒரு அமைதியான உணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் சமூகத்தில் நாமும்ஒரு அங்கம் என்ற உணர்வும் ஏற்படடுள்ளது. நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்” என்றார்.