உக்ரைனில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது ரஷ்ய படையினர் குண்டுவீச தாக்குதல் நடத்தியதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது 25வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகரங்கள் மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை சுமார் 400 பேர் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது ரஷ்ய படைகள் குண்டுவீசி தாக்கியதாக மரியுபோல் நகர கவுன்சில் தெரிவித்துள்ளது.
ரஷ்யா குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் பள்ளி கட்டிடம் முற்றிலும் அழிந்துவிட்டது, மக்கள் அனைவரும் இடிபாடுகளில் புதைந்துள்ளனர்.
குறித்த பள்ளியில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் தஞ்சமடைந்திருந்ததாக அதிகாரிகள் கூறினார்.
தற்போது வரை உயிரிழப்புகள் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
கடந்த வாரம் இதே மரியுபோல் நகரில் கிட்டதட்ட 1000 பேர் தஞ்சமடைந்திருந்த தியேட்டர் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.