இம்பால்: மணிப்பூரில் பீரேன் சிங் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
2002-ம் ஆண்டு முதல் 2017 வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்த மாநிலம் மணிப்பூர். ஒக்ராம் இபோபி சிங் அசைக்க முடியாத முதல்வராக இருந்தார். 2017 தேர்தலில் நாகா மக்கள் முன்னணி, நாகா மக்கள் கட்சியுடன் இணைந்து பாஜக ஆட்சியைப் பிடித்தது. பீரேன் சிங் முதல்வரானார். ஆனால், அந்தக் கூட்டணியால் பாஜக அவ்வப்போது சிக்கல்களை எதிர்கொண்டது.
இதனையடுத்து நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கிடையாது என அறிவித்துவிட்டுதான் பாஜக களமிறங்கியது. காங்கிரஸ் உட்பட சில கட்சிகள் தனித்துக் களம்கண்டன. தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்தது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.
மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் 32 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. தற்போதைய முதல்வர் பீரேன் சிங்கிற்கு போட்டியாக முக்கிய தலைவர்களும் களமிறங்கினர்.
இந்நிலையில், வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் கூட்டம் தலைநகர் இம்பாலில் நடந்தது. அதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட கட்சியின் மேலிட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், பீரேன் சிங் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து, ஆளுநர் இல.கணேசனை சந்தித்து ஆட்சியமைக்க பிரேன் சிங் உரிமை கோர உள்ளார். விரைவில், பீரேன் சிங் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார்