மரியுபோல் நகரில் பொதுமக்கள் தங்கியிருந்த பள்ளி கட்டிடத்தை குண்டு வீசி தகர்த்தது ரஷிய படை

மரியுபோல்:
உக்ரைன் மீது ரஷிய படைகள் 25வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட அனைத்து உக்ரைன் நகரங்களிலும் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் பெரும்பாலான நகரங்கள் உருக்குலைந்து உள்ளன.
ரஷிய ராணுவத்துக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் கடுமையாக போரிட்டு வருகிறார்கள். ஆரம்பத்தில் உக்ரைனின் ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் ஏராளமான ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டன.
கடந்த சில நாட்களாக மரியுபோல் நகரம் மீது தொடர்ந்து ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது நகருக்குள் ரஷியாவின் பெரும் படைகள் நுழைந்து தாக்குதல் நடத்துகின்றன. ரஷிய படைக்கும் உக்ரைன் வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
இதற்கிடையே மரியுபோல் நகரில் பொதுமக்கள் தங்கியிருந்த பள்ளி கட்டிடம் மீது ரஷிய ராணுவம், குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் சிக்கி உள்ளனர். பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதேபோல் கார்கிவ் நகரில் ரஷிய படை ஷெல் குண்டுகளை வீசி தாக்கியதில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். 
ரஷியா போர் குற்றம் புரிவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மீண்டும் குற்றம்சாட்டி உள்ளார். ரஷிய துருப்புக்களின் இடைவிடாத அத்துமீறல் போர்க்குற்ற வரலாற்றில் இடம்பெறும் என்றும் அவர் கூறி உள்ளார்.
ரஷிய படைகள் இன்று கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடலில் உள்ள கப்பல்களில் இருந்து ஏவுகணைகள் மூலம் உக்ரைனை தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.