மாணவர்கள் அரசு பள்ளியில் பயில்வதை பெருமையாக மாற்ற வேண்டும்- அமைச்சர் அறிவுரை

திருச்சி:

திருச்சியில் பள்ளி மேலாண்மை குழு கூட்ட தொடக்க நிகழ்ச்சி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

பள்ளி மேலாண்மைக்குழு என்பது 2009-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. ஆசிரியர்களை பெற்றோர்கள் நண்பர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பள்ளிகளில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசனை செய்ய முடியும். இந்த குழுவில் பெற்றோர்கள் தான் தலைவராக இருக்க வேண்டும். மாதம் ஒரு முறை கட்டாயம் இந்த மேலாண்மை குழு சார்பாக பள்ளிகளில் கூட்டம் நடத்தப்படும்.

இந்த கூட்டத்தில் பள்ளி மற்றும் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பெற்றோர்கள் முன்னிலையில், ஆசிரியர்கள் ஆலோசனை செய்வார்கள். அதன் மூலமாக பள்ளிகளில் ஏற்படும் பிரச்சனைகள் சரி செய்து வைக்கப்படும். இந்த பள்ளி மேலாண்மை குழுவின் மூலமாக பள்ளிகளில் சேராத குழந்தைகளையும் சேர்த்து படிக்க வைக்கலாம். கடந்த 9 மாதத்தில் 1 லட்சத்து 85 ஆயிரம் படிக்காத குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்துள்ளோம். அரசாங்க பள்ளிகளில் படிப்பது வறுமை அல்ல அதை பெருமையாக மாணவர்கள் மாற்ற வேண்டும். பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் முழுவதையும் இந்த குழுக்கள் மூலமாக தீர்த்து வைக்கப்படும்.

இந்த பள்ளி மேலாண்மைக்குழு வருங்கால சந்ததியினர் முறையாக பயன்படுத்துவதன் மூலமாக பயனடைவார்கள். இதற்கு முக்கியமாக பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு கட்டாயம் மதிப்பு வழங்கப்படும். மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும் பொழுது ஒழுக்கமாக வர வேண்டும். தமிழகத்தில் தற்போது வரையில் ஹிஜாப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. தமிழக பட்ஜெட்டிலும் முதல்வர் கல்வித் துறைக்காக கடந்த ஆண்டைவிட ரூ.4,300 கோடி அதிகமாக ஒதுக்கியுள்ளார்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.