மாற்றுப் பயிர், ஊடுபயிர் மூலம் விவசாயிகளின் வருவாயைப் பெருக்க பட்ஜெட்டில் வழிவகைசெய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைச் செயலர் சி.சமயமூர்த்தி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
மாற்றுப் பயிர் சாகுபடி மூலம் ஊட்டச்சத்து மிகுந்த பயிர் வகைகள், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி, பழங்கள், காய்கறிகளின் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தென்னை, மா, கொய்யா வாழை சாகுபடியின்போதும், நெல்வரப்புகளிலும் ஊடுபயிர் சாகுபடி செய்து, விவசாயிகளின் வருவாயைப் பெருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அனைத்து சேவைகளும் செல்போன் மூலம் கிடைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். எனவே, இந்த பட்ஜெட்டில் டிஜிட்டல் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், தென்னங்கன்று, பழக் கன்று, மா, கொய்யா கன்று உள்ளிட்டவற்றை வாங்க முன்பதிவு செய்ய முடியும்.
அதுமட்டுமின்றி, அரசு திட்டங்களை ஆன்லைன் மூலம் தெரிந்துகொண்டு, விவசாயிகள் பயன்பெறவும் வழிவகை செய்யப்படும்.
விவசாயிகளில் பெரும்பாலானோர் சிறு, குறு விவசாயிகளாக இருப்பதால், அவர்களால் டிராக்டர் மற்றும் பெரிய உபகரணங்களை வாங்க இயலாது. அதனால் சிறிய வகை உழவு இயந்திரங்கள் உள்ளிட்டவை வழங்கவும், உற்பத்தி செய்த பொருளைப் பதப்படுத்தி, மதிப்புக்கூட்டி, சந்தைப்படுத்தவும் பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒரே மாதிரியான திட்டத்தை பல்வேறு அரசுத் துறைகள் செய்யும் நிலையை மாற்றி, அந்த துறைகளை ஒருங்கிணைத்து, கிராமங்கள் தன்னிறைவு பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, ஒவ்வொரு கிராமத்துக்கும் ரூ.90 லட்சம் வரையிலான திட்டங்கள் சென்றடையும்.
குறு, சிறு விவசாயிகளின் நிலங்களை ஒருங்கிணைத்து, இயற்கைவிவசாயம் செய்ய ஊக்குவிக்கப்படும். சில நாடுகளில் ஒரே சமயத்தில் இயற்கை விவசாயம் செய்ய அறிவுறுத்தியதால், அங்குஉணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், படிப்படியாக இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்.
பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி ஆகியவற்றை சுத்தமான முறையில் தயாரித்து, மதிப்புக்கூட்டி விற்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து, காதி பவன் மூலம் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படும். மேலும், பனைத் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கி, பனைப் பொருட்கள் விற்பனையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகூத்தில் 7 நிறுவனங்களுக்கு நீரா பானம் தயாரிக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தென்னை மரத்திலேயே ஐஸ்பாக்ஸ் வைப்பதுபோன்ற தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
நீரா பானம் கெட்டுப் போகாமல் இருப்பதற்குத் தேவையான தொழில்நுட்பத்தைக் கண்டறியும் பணியை தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தி செலவு கணிசமாகக் குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.