நடிகர் சங்க தேர்தலில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டு வென்ற நடிகர் கார்த்தி சங்கக் கட்டிடத்தை விரைவில் கட்டி முடிப்போம் என்றும் விரைவில் தமிழக முதலமைச்சரை சந்திப்போம் என்றும் தெரிவித்தார்.
நடிகர் சங்கத்திற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. பாண்டவர் அணியில் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பூச்சிமுருகன் ஆகியோர் போட்டியிட்டனர். சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் பாக்யராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த், குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிட்டனர். நீதிமன்ற தடை காரணமாக 2 ஆண்டுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை. நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
பாக்யராஜ் 1054 வாக்குகள் வாங்கிய நிலையில் நாசர் 1701 வாக்குகள் பெற்று மீண்டும் தலைவர் ஆகிறார். அதேபோல பொதுச்செயலாளராக மீண்டும் நடிகர் விஷால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொருளாளராக நடிகர் கார்த்தி தேர்வாகியுள்ளார்.
வெற்றிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி, “ 2015 முதல் 2019 வரை நடிகர் சங்க வரலாற்றில் முக்கியமான நாட்கள். எங்கள் டீம் சொந்த வாழ்க்கையை, நேரத்தை தியாகம் செய்து உழைத்தார்கள். இப்போது கிடைத்துள்ள வெற்றி 2 வருட சட்ட போராட்டத்திற்கு பிறகு கிடைத்துள்ளது. நடிகர் சங்கக் கட்டிடம் முடிவுற்று அதிலிருந்து வரும் வரும் வருமானம் தான் எதிர்கால சந்ததிக்கு உதவப்போகிறது.” என்று தெரிவித்தார்.
பதவிக்கால குறித்த கேள்விக்கு பதிலளித்த கார்த்தி, “பதவியேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும். நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்க இன்னும் 3 ஆண்டுகள் கிடைத்துள்ளது. கட்டிடத்தை விரைவாக முடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
தங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த கார்த்தி, அனைவருடனும் இணைந்து இணக்கமாக செயல்படுவோம் என உறுதியளித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த கார்த்தி, “கண்டிப்பாக. ஒவ்வொரு தேர்தல் வெற்றிக்கு பின்னும் முதலமைச்சரை சந்திப்பது மரபு” என்று தெரிவித்தார். நிதிச் சிக்கல் நிறைய இருப்பதாகவும் அவற்றை ஒவ்வொன்றாக சரி செய்வோம் என்று நடிகர் கார்த்தி தெரிவித்தார்.