புதுடெல்லி: மொத்த பயனாளர்களுக்கான டீசல் விலை ₹25 அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. ஆனால், 5 மாநில தேர்தல் காரணமாக, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 100 டாலரை தாண்டியும், பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நீடிக்கிறது. நேற்று ஸ்பாட் விலையாக பேரல் 103 டாலர் என இருந்தது. இந்த சூழ்நிலையில், மொத்த பயனாளர்களுக்கான டீசல் விலை நேற்று லிட்டருக்கு ₹25 உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, சில்லரை விற்பனை விலையை விட அதிகம். உதாரணமாக, டெல்லியில் டீசல் சில்லரை விற்பனைக்காக பங்க்குகளில் ஒரு லிட்டர் ₹86.67 என விற்கப்படுகிறது. ஆனால், தொழிற்சாலை பயன்பாடு போன்றவற்றுக்கான மொத்த பயனாளர்களுக்கான விலை ₹115 என உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலை போன்ற மொத்த பயனாளர்கள், தங்களின் டீசல் தேவைக்கு ணெ்ணெய் நிறுவனங்களிடம் இருந்து டேங்கர்கள் மூலம் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். இவர்களுக்கு நேற்றைய திடீர் விலை உயர்வு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஏற்கெனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தொழிற்சாலைகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின. இந்த சூழ்நிலையில், மேற்கண்ட டீசல் விலை உயர்வு, தொழிற்சாலைகளின் நிலையை மேலும் கவலைக்குரியதாக மாற்றி விட்டது என, தொழிற்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில்லரை விலையில் பெட்ரோல் பங்க்குகளில் விற்பனை 5வது மாதமாக உயர்ந்துள்ளது. பஸ் போக்குவரத்து நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் பலர், நேரடியாக நிறுவனங்களில் கொள்முதல் செய்வதற்கு பதிலாக, பங்க்குகளில் டீசல் நிரப்பிக் கொள்வதும் இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.