வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும் போது மற்ற கண்டங்களைப் போல ஐரோப்பாவில் பல இயற்கை வளங்கள் இல்லை, பெரியளவு மக்கள் தொகை இல்லை. இருந்தாலும் அவர்கள் பலம் பொருந்தியவர்களாக இருந்தனர். மற்றவர்கள் தங்களைக் கைப்பற்றுவதற்குப் பதிலாக அவர்கள் ஏனைய நாடுகளைக் கைப்பற்றினர். ஐரோப்பியரின் ஆதிக்கம் இல்லாத கண்டமே இந்தப் பூமியில் இல்லை என்று சொல்லலாம். இது ஆதி தொட்டு இன்றுவரை தொடரும் ஒரு விஷயம். என்னதான் காலனித்துவம் பெரும்பாலும் முடிவுக்கு வந்துவிட்டாலும் ஐரோப்பிய ஆதிக்கம் இன்றும் மறைமுகமாகப் பல நாடுகளிலிருந்து கொண்டேதான் இருக்கிறது.
ரோமானியர்களும் கிரேக்கர்களும் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பாவைப் பல புரட்சிகரமான சிந்தனைகளாலும், நவீன தத்துவங்களாலும், புதிய கண்டுபிடிப்புகளாலும் வளப்படுத்தினார்கள். அதன் பின் வந்தவர்களும் அதை மேலும் மெருகேற்றி வளர்க்க முயன்றார்கள். அவர்களுக்கு ஒப்பான அரசியல் புரிதல் இல்லாமல் தடுமாறியதால்தான் நாம் அவர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தோம்.
கடந்த 100 ஆண்டுகளில் ஐரோப்பா மிகப்பெரிய மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. இரண்டு உலகப்போர்கள், பனிப்போரின் முடிவு, பல நவீனத் தொழில்நுட்பங்களின் அறிமுகம், ஐக்கிய நாடுகள் சபையின் தொடக்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கம், Nato-வின் எழுச்சி, யூரோ எனும் ஒற்றை நாணயத்தின் புழக்கம் ஆகிய அனைத்தும் இப்பகுதியை கலாசாரம் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட உலகளாவிய பொருளாதார அதிகார மையமாக மாற்ற உதவியது.
அமெரிக்காவுக்கு அடுத்த படியாக உலகின் இரண்டாவது பணக்கார மற்றும் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக ஐரோப்பிய ஒன்றியம், சுமார் $16 டிரில்லியன் ஜிடிபியுடன் அசைக்கமுடியாத பொருளாதார பலத்துடன் முன்னணியில் நிற்கிறது.
இவை எல்லாம் எப்படி சத்தியம்? இதற்குப் பலர் பல விதமான பதில்களை அடுக்கினாலும், எல்லா சாலைகளும் ரோமை நோக்கிச் செல்லும் என்பது போல எல்லா பதில்களும் கடைசியில் இணையும் புள்ளி அவர்களது தலைமைத்துவம்.
மோசமான தலைமையின் கீழ் சிக்கிய நாடுகள் எப்படி நாறிப்போகும் என்பதற்கு வரலாற்றில் நிறைய நாடுகள் ஒரு வாழும் உதாரணம். ஒரு நல்ல தலைவன் வாய்க்காத எதுவுமே மாலுமி இல்லா கப்பல் போல, திசை தெரியாமல் தொலைந்து போகும். அதுவே சிறப்பான ஒரு தலைமை வாய்த்துவிட்டால், அந்த நாட்டின் வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் யாராலுமே தடுக்க முடியாது.
“A leader is one who knows the way, goes the way, and shows the way” என்பார்கள். ஐரோப்பாவுக்குக் கிடைத்த இயற்கையின் அருட்கொடை அதன் வளங்கள் என்றால், அவர்களே உருவாக்கிக் கொண்ட மனித வளம், அங்கு உருவான பெரும் தலைவர்கள். ஐரோப்பாவை, குறிப்பாக மேற்கு ஐரோப்பாவின் ராக்கெட் வேக வளர்ச்சி பற்றிப் பேசும் போது அதன் பின்னணியில் இருக்கும் சில முக்கியமான தலைவர்கள் பற்றிக் குறிப்பிடாமல் இருக்கவே முடியாது. அதே நேரத்தில் தமக்குள்ளே தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்னைகளை, அதற்குச் சம்பந்தமே இல்லாத மூன்றாம் நபரைக் கூட்டி பஞ்சாயத்துப் பண்ணும் முட்டாள் தலைவர்களும் இங்கு இல்லாமல் இல்லை. அவர்களைப் பற்றி இந்தத் தொடரின் இறுதிகளில் பார்க்கலாம்.
கிரேட் மேன் தியரியை (Great man theory) கண்டுபிடித்த தாமஸ் கார்லைல் (Thomas Carlyle), வரலாறு அசாதாரண தலைவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்கிறார். தலைமைப் பண்புக் கோட்பாடு (Leadership theory), தலைமைத்துவத்துக்குத் தேவையான பண்புகளுடன் சிறந்த தலைவர் பிறக்கிறார் என்கிறது. மற்றவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்தும் இந்தக் குணாதிசயங்கள்தான், அதிகாரம் மற்றும் பொறுப்பான பதவிகளை அவர் ஏற்றுக்கொள்வதற்குக் காரணமாகின்றன. அதேபோல் தன்னைப் பின்தொடர்பவர்களின் நலனுக்கான சிறந்த இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை நிறைவேற்றத் தேவையான சந்தர்ப்பங்களையும் உருவாக்கிக் கொடுக்கும் ஒரு ஹீரோவாக அத்தலைவன் இருப்பான் என்கிறது இந்தத் தலைமைப் பண்புக் கோட்பாடு.
இவ்வாறான ஹீரோக்களால் சிருஷ்டிக்கப்பட்ட ஐரோப்பாவின் இரண்டு அதி சிறந்த தலைவர்கள் இவ்வாரம் யூரோ டூரில்…
ஜெர்மனியின் இரும்புப் பெண் ஏஞ்சலா மேர்க்கெல் (Angela Merkel)
16 வருடங்கள், 16 நாள்கள் ஜெர்மனி எனும் வல்லரசின் அதி உயர் சிம்மாசனத்தில் அமர்ந்து நிறைவான ஒரு ஆட்சியை நடத்திய ஐரோப்பாவின் சிங்கப்பெண். “The Euro is our common fate, and Europe is our common future” என இவர் எடுத்த முயற்சிகளும் முடிவுகளும், ஜெர்மனியை மட்டுமல்ல, முழு ஐரோப்பாவையுமே அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றது. பொருளாதார மந்தநிலையிலிருந்த ஜெர்மனியை மிகவும் கவனமாக வழி நடத்தி, ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார அங்கமாக மாற்றிக் காட்டிய திறமையான தலைவர். 2005-ல் பதவிக்கு வந்ததிலிருந்து இவர் எடுத்த தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஐரோப்பிய அரசியலின் தீர்க்கமான முடிவுகளாக மாறின. பனிப்போருக்குப் பின் பாழ் நிலையிலிருந்த ஜெர்மன் அரசியலை அப்படியே திருப்பிப் போட்ட இவரது சாதனைகள் எல்லாம் ஜெர்மன் அரசியலின் அதிரடி அத்தியாயங்கள்.
குவாண்டம் வேதியியலாளராக (quantum chemist) பயிற்சி பெற்ற மேர்க்கெல் தனது முதல் 35 வருடங்களைச் சோவியத் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு ஜெர்மனியில் கழித்தார். 1989-ல் பெர்லின் சுவர் இடிந்து விழும் வரை அரசின் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்தவர், அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வோடு அறிவியல் பணியைக் கைவிட்டு, தனது வாழ்நாள் கனவான அரசியலில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினார்.
2015-2016 காலகட்டங்களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட இடம்பெயர்வு நெருக்கடியில் (Migration Crisis) மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து லட்சக்கணக்கான அகதிகள் புகலிடக் கோரிக்கை வேண்டி ஐரோப்பாவிற்குள் நுழைந்தபோது, மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போல ஜெர்மன் தன் கதவுகளை மூடிக்கொள்ளவில்லை. இது பரவலாக ஐரோப்பியர்கள் மத்தியில் எதிர்ப்பலையை உண்டாக்கினாலும், துணிச்சலாகத் தான் எடுத்த முடிவில் இறுதிவரை உறுதியாக நின்றார் அவர்.
2007-ல் தொடங்கிய உலகளாவிய நிதி நெருக்கடி, அதைத் தொடர்ந்து யூரோ மற்றும் கிரேக்க நிதி நெருக்கடிகள், அரபு நாடுகளின் எழுச்சிகள். லிபியா மற்றும் சிரியாவில் நடந்த வன்முறை மோதல்கள், உக்ரைன் நெருக்கடி, சிரியா மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து வந்த அகதிகள் நெருக்கடி, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவின் பின்வாங்கல், பரவலான ஜனரஞ்சக வாதம், டொனால்ட் ட்ரம்ப்பின் கீழ் அமெரிக்க நிர்வாகத்துடன் மோதல்கள், இங்கிலாந்தின் பிரெக்சிட் முதல் சமீபத்தைய கோவிட் நெருக்கடி வரை அத்தனை சிக்கல்களையும் மிகவும் திறமையாகக் கையாண்ட ஐரோப்பாவின் ஒரே அரசியல் தலைவர் ஏஞ்சலா மேர்க்கெல்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவரது சாதனைகள், ஃபோர்ப்ஸின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் (Forbes’ world’s most powerful women) பட்டியலில் எட்டு முறை முதலிடத்தைப் பெற்றுக் கொடுத்தது. வடக்கு ஜெர்மனியில் பிறந்து, கிழக்கு ஜெர்மனியில் வளர்ந்த, இயற்பியல் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்ற இந்த இரும்புப் பெண், கடந்த ஒரு தசாப்த காலமாக ஐரோப்பாவை ஆட்டிப் படைத்த சர்வதேச நெருக்கடிகளை எல்லாம் அசால்ட்டாக சமாளித்தார். 16 ஆண்டுகளாக ஜெர்மன் அரசியல் மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலும் மேர்க்கெலைச் சுற்றியே சுழன்றது. 27 உறுப்பு நாடுகளுக்கு இடையே இருந்த தீர்க்க முடியாத பல பிரச்னைகளுக்கு முடிவு கண்டவர், ஜெர்மன் வரலாற்றிலேயே மூன்றாவது அதிக காலம் பணியாற்றிய அதிபர் என்ற பெருமையோடும், உலகின் அதி சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவர் என்ற புகழோடும் 2021 டிசம்பர் 8-ல் ஓய்வு பெற்றார்.
பிரிட்டனின் அரசியல் ஆளுமை டோனி பிளேர் (Tony Blair)
முதல் உலகப்போரில் முக்கிய அரசியல் புள்ளியாக இருந்த சர்.வின்ஸ்டன் சர்ச்சிலின் பின் பல பிரதமர்கள் இங்கிலாந்தில் பதவிக்கு வந்தாலும் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி யாரும் சோபிக்கவில்லை. இந்தக் குறையை நீக்கி, ஐரோப்பாவில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் பிரிட்டனின் இடத்தை மீண்டும் முன்னணிக்குக் கொண்டு வந்தார் 1997-ல் பதவிக்கு வந்த டோனி பிளேர்.
கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் பிரதம மந்திரியாக பணியாற்றிய பிளேர், கட்சியின் 100 ஆண்டுக்கால வரலாற்றில் தொடர்ந்து மூன்று பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்ற ஒரே தொழிற்கட்சித் தலைவர் என்ற பெருமையோடு 1997 முதல் 2007 வரை ஆட்சி புரிந்தார். அவர் பதவியிலிருந்த காலத்தில், இங்கிலாந்து பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது. முதலீடு மற்றும் சீர்திருத்தத் திட்டத்தின் மூலம் பிரிட்டனின் பொதுச் சேவைகளில், குறிப்பாகச் சுகாதாரம் மற்றும் கல்வியில் பிளேரின் அரசாங்கம் மிகப்பெரிய அளவிலான முன்னேற்றங்களை ஏற்படுத்தியது. இவரது காலத்தில்தான் பிரிட்டனில் முதன்முறையாகக் குறைந்தபட்ச ஊதியம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் முதலாளிகளின் சுரண்டல்களிலிருந்து விடுதலை பெற்ற தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது.
ஐரோப்பா முழுதும் பொதுவான நாணய அலகாக யூரோ அமல்படுத்தப்பட்டபோது, டோனி பிளேர் ஸ்டெர்லிங் கரன்சியை வைத்திருப்பாரா இல்லை பிரிட்டனை யூரோவிற்கு அழைத்துச் செல்வாரா எனும் மிகப்பெரிய பதற்றம் நிலவியது. இங்கிலாந்தின் புகழ்பெற்ற ‘The Sun’ பத்திரிகை தனது முதல் பக்கத் தலைப்பாக “பிரிட்டனின் மிகவும் ஆபத்தான மனிதனா?” என்ற தலைப்போடு பிளேயரின் புகைப்படத்தைப் பிரசுரித்து இருந்தது. இவ்வாறான ஒரு பதற்றமான சூழ்நிலையில் இங்கிலாந்து யூரோ மண்டலத்தில் இணையாது என்ற பிளேரின் அதிரடியான முடிவைப் பிரிட்டிஷ் பொதுமக்கள், ஊடகங்கள் மற்றும் இங்கிலாந்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அமோகமாக ஆதரித்தன. பிளேரின் அரசியல் செல்வாக்கும் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. அதன் பின் அவரது அரசு மேற்கொண்ட முடிவுகளும் முயற்சிகளும் இங்கிலாந்து மக்களின் வாழ்க்கையை வசந்தகாலமாக மாற்றின.
பிளேரின் ஆட்சிக் காலத்தின் மற்றுமொரு குறிப்பிடத்தக்கச் சாதனை, 1998-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி கையொப்பமிடப்பட்ட பெல்ஃபாஸ்ட் உடன்படிக்கை (Belfast Agreement). ‘குட் ஃப்ரைடே ஒப்பந்தம்’ என்று குறிப்பிடப்படும் இது, பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் அரசாங்கங்கள், மற்றும் வடக்கு அயர்லாந்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இணைந்து வடக்கு அயர்லாந்தை நிர்வகிப்பது தொடர்பான ஒருமித்த முடிவுகளை எடுக்க உதவியது.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் கணிசமான சீர்திருத்தங்களை பிளேரின் ஆட்சி அறிமுகப்படுத்தியது. மாணவர்களுக்கான இலகு கல்விக் கட்டணங்கள், நலன்புரி கொடுப்பனவுகள், கட்டாய கல்வி முறை போன்றவை பிரிட்டிஷ் மாணவர்களின் கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின.
கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள், கட்டாய டிஎன்ஏ பதிவு, குற்றங்களுக்கான கடும் தண்டனைகள் போன்ற புதிய உத்தரவுகளைப் பிறப்பித்து பொலிஸ் அதிகாரங்களை அதிகரித்தார். இதனால் பிரிட்டனில் குற்றச் செயல்கள் பெரியளவில் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.
“ஐரோப்பாவை ஒரு ஒருமித்த அரசியல் திட்டமாக நான் நம்புகிறேன். வலுவான மற்றும் அக்கறையுள்ள சமூக பரிமாணத்துடன் ஐரோப்பாவை நான் பார்க்கிறேன்” எனக்கூறிய இந்த அரசியல் சாணக்கியன், ஐரோப்பிய யூனியனுக்கான அரசியலமைப்பை நிறுவுவதற்காகப் பல வழிகளில் பங்களிப்பு செய்துள்ளார். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான இங்கிலாந்தின் முதல் சுற்றுச்சூழல் திட்டத்தின் அறிமுகம், 2012-ல் வெற்றிகரமாகத் தலைமை தாங்கி நடத்தி முடித்த லண்டன் ஒலிம்பிக், வயதானவர்களுக்கான அதிகரித்த ஓய்வூதியம் எனப் பிரிட்டன் வரலாற்றில் டோனி பிளேர் எழுதியது எல்லாமே வெற்றிகரமான வரலாற்று அத்தியாயங்கள்தான்.
சாதனைகள் நிறைந்த பத்தாண்டு ஆட்சியை 2007ல் முடித்துக் கொண்டாலும் டோனி பிளேரின் அரசியல் பணி ஓய்வுக்கு வரவில்லை. அரசாங்கங்கள் தங்கள் மக்களுக்குத் திறமையான ஆட்சியை வழங்கத் தேவையான அறிவுரைகளை வழங்குதல், மத்திய கிழக்கில் அமைதிக்காக பணியாற்றுதல், தீவிரவாதத்தை எதிர்த்தல், நடைமுறைக் கொள்கைத் தீர்வுகளுடன் அரசியலின் மையக் களம் எவ்வாறு தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவேண்டும் என்பது பற்றி தீர்மானித்தல் உட்பட, இன்று உலகில் உள்ள மிகவும் கடினமான சவால்களில் சிலவற்றைச் சமாளிப்பதற்காக உலகளாவிய மாற்றத்திற்கான டோனி பிளேர் நிறுவனத்தை (Tony Blair Faith Foundation) நிறுவி, இன்றும் வெற்றிகரமாக இயங்கி வருகிறார் இந்த பிரிட்டனின் சக்திவாய்ந்த அரசியல் ஆளுமை.
ஐரோப்பா வல்லரசாக வளர முக்கியமான ஒரு காரணி ஐரோப்பிய ஒற்றைச் சந்தை முறை. பங்குபெறும் நாடுகளிடையே வர்த்தக உடன்படிக்கையால் உருவாக்கப்பட்ட இந்த வெற்றிகரமான நிறுவனம் எப்படி ஐரோப்பியர்களின் வாழ்க்கையை மாற்றியது? அடுத்த வார யூரோ டூரில், யூரோவின் அறிமுகமும் யூரோப்பியன் சிங்கிள் மார்க்கெட்டும்!