ஆமதாபாத்: சுசூகி நிறுவனம் குஜராத் மாநிலத்தில் மின்சார வாகனங்கள் மற்றும் அதற்கு தேவையான பேட்டரிகளை தயாரிக்க சுமார் 10,430 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் மின்சார கார்களுக்கான சந்தை விரிவடைந்து வருகிறது. தற்போதைக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சார கார்களை மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த விலைக்கு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் இந்தியா வருகை புரிந்துள்ள ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா நேற்று (மார்ச் 19) இந்தியா – ஜப்பான் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடியுடன் பங்கேற்றார். இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் குஜராத் மாநிலத்துடனான சுசூகி நிறுவனத்தின் ரூ.10,430 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதில் 2025க்குள் சுசூகி மின்சார வாகனங்களுக்கான உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.3,100 கோடியும், 2026க்குள் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க ரூ.7,300 கோடியும் செலவிடப்படும். மேலும் 2025க்குள் மாருதி சுசூகி டொயாட்சு இந்தியா சார்பில் வாகன மறுசுழற்சி ஆலை அமைக்க ரூ.45 கோடி முதலீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுசூகியின் எதிர்கால நோக்கம் கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாக்குவது என நிறுவனம் சார்பில் கூறப்பட்டது. அதனை சிறிய கார்கள் மூலம் அடைவோம். தன்னிறைவு இந்தியாவை உருவாக்க, இந்தியாவில் தீவிர முதலீட்டைத் தொடருவோம் என கூறியுள்ளனர்.
Advertisement