தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூண்டு பயிரிடப்படுகிறது. மேலும், தமிழக தேவைக்கு வட மாநிலங்களில் இருந்து பூண்டு அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது. சேலத்தில் பூண்டு மொத்த விற்பனை மையமாக விளங்கும் பால் மார்க்கெட், லீ பஜார் உள்ளிட்ட இடங்களுக்கு வட மாநிலங்களில் இருந்து பூண்டு விற்பனைக்கு வருகிறது.
தற்போது, வடமாநிலங்களில் பூண்டு அறுவடை நடைபெற்று வரும் நிலையில், வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ளது.
இதுதொடர்பாக சேலத்தைச் சேர்ந்த பூண்டு மொத்த வியாபாரிகள் கூறியதாவது:
குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் பூண்டு அதிகளவில் பயிரிடப்பட்டு, தமிழகத்துக்கு விற்பனைக்கு வருகிறது. சேலத்துக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பூண்டு விற்பனைக்கு வருகிறது.
அறுவடைக் காலம் என்பதால், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலத்தில் தினசரி 1.50 லட்சம் மூட்டைகள் பூண்டு அறுவடை செய்யப்படுகிறது. சேலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும் வடமாநில பூண்டு நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது.
தற்போது, அறுவடையில் இருந்து உடனே கிடைப்பதால், பூண்டில் ஈரத்தன்மை அதிகமாக உள்ளது. உலர்ந்த பழைய பூண்டு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், புதிய பூண்டு மொத்த விற்பனையில் கிலோ ரூ.30 முதல் ரூ.60 வரை தரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.
பெரிய ரக பூண்டு மூட்டை (50 கிலோ) ரூ.3,000 வரையும், சிறிய ரகம் மூட்டை ரூ.1,500 வரை மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.