வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சீனத் தூதுவர் மரியாதை நிமித்தம் சந்திப்பு

சீனத் தூதுவர் குய் சென்ஹோங்குடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 மார்ச் 18ஆந் திகதி கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இச்சந்திப்பின் போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 65ஆவது ஆண்டு நிறைவையும், 1952ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையிலான ரப்பர்-அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவையும் நினைவுகூரும் வகையில் சீன அதிகாரிகளால் வெளியிடப்பட்ட முதல் நாள் அட்டைப்படம் சீனத் தூதுவரால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

அண்மையில் நடைபெற்ற 49வது மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது சீன அரசாங்கம் வழங்கிய ஆதரவை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பாராட்டினார். கடந்த மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது சீனா வழங்கிய ஆதரவை நினைவு கூர்ந்த அமைச்சர் பீரிஸ், உதவிகள் தேவைப்படும் போது எதிர்காலத்திலும் சீனா ஆதரவை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கை – சீன சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் தற்போதைய பேச்சுவார்த்தைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் 7வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இலங்கையில் உள்ள அந்தந்த நிறுவனங்களின் ஆதரவுடன் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.

தற்போது நிலவும் உணவு, மருந்து மற்றும் சீமெந்துத் தட்டுப்பாடுகளைத் தீர்ப்பதற்காக மூன்று குழுக்களை அதிமேதகு ஜனாதிபதி நியமித்துள்ளதாகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சீனத் தூதுவருக்கு விளக்கமளித்தார்.

சீனாவுடன் 26 சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளில் சீனா கைச்சாத்திட்டுள்ளதை சுட்டிக்காட்டிய தூதுவர் குய், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை இறுதி செய்வது இலங்கையின் உள்ளூர் சந்தைக்கும் உற்பத்திகளுக்கும் பாரிய நன்மை பயக்கும் என சுட்டிக்காட்டினார். சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் 7வது சுற்றுப் பேச்சுவார்த்தைகளை விரைவில் மீண்டும் தொடங்குமாறு அவர் இலங்கை அதிகாரிகளை வலியுறுத்தினார்.

மேலும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்த சீனத் தூதுவர், இலங்கைக்கான அரச அவை உறுப்பினரும், வெளிநாட்டு அமைச்சருமான வாங் யீயின் வெற்றிகரமான உத்தியோகபூர்வ விஜயத்தை 2021 டிசம்பரின் பிற்பகுதியில் ஏற்பாடு செய்தமைக்காக மிகுந்த திருப்தியை வெளிப்படுத்தினார். சீன சமூகக் கட்சியை நிறுவி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நினைவு நாணயம் ஒன்றை வெளியிட்டமைக்காக இலங்கை அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

மேலும், கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தினால் பௌத்த பிக்குகள் மற்றும் விகாரைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல நலன்புரிச் செயற்பாடுகள் மற்றும் தேவைகளையுடைய மக்களுக்கு 150 உணவுப் பொதிகள் வழங்குகின்றமை தொடர்பாகவும் சீனத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு விளக்கமளித்தார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையில் நிலவுகின்ற அரசாங்கங்களுக்கிடையிலான தொடர்புகள், மக்களுக்கிடையிலான தொடர்புகள் மற்றும் கட்சிகளுக்கிடையிலான தொடர்புகள் உட்பட வலுவான இருதரப்பு உறவுகள் குறித்து இரு தரப்பினரும் மிகுந்த திருப்தியை வெளிப்படுத்தின.

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ. தாரக பாலசூரிய, சீனத் தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் இடம்பெற்றிருந்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 மார்ச் 20

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.