இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், நீதிபதி ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, “ஹிஜாப் தடைக்கு எதிராகச் சரியான முகாந்திரங்கள் முன்வைக்கப்படவில்லை. மேலும் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமானதும் அல்ல. இதனால் கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்” எனக் குறிப்பிட்டு தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஹிஜாப் தடைக்கு எதிராக மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் பகுதியில் கடந்த 17-ம் தேதி போராட்டம் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநில தணிக்கை குழு உறுப்பினர் ரஹமத்துல்லா, கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், அதற்கு உதாரணமாக பல்வேறு மாநிலங்களில் நீதிபதிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்த சம்பவங்களையும், ஜார்க்கண்ட் கொலை சம்பவத்தையும்அந்த நபர் குறிப்பிட்டு பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவியது.
அதேபோல, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராமபட்டினத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில், நெல்லையைச் சேர்ந்த மாநில பேச்சாளர் ஜமால் முகமது உஸ்மானி, ஹிஜாப் குறித்து தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதுாறாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும், பிரதமர் மோடியை பற்றியும், மத கலவரத்தை துாண்டும் விதமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும், நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் இருவர் மீதும் தமிழக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதையடுத்து, ரஹ்மத்துல்லா திருநெல்வேலியிலும், ஜமால் முகமது உஸ்மானி தஞ்சாவூரிலும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதால், கர்நாடக அரசு அவர்களுக்கு `ஒய்’ பிரிவுப் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டிருக்கிறது.