கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு கல்லூரியில் மாணவ – மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்கள் வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சார்ந்த மாணவ மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால் இருதரப்பு இடையே மோதல் போக்கு உண்டானது.
இதுகுறித்த வழக்கத்தில் கர்நாடக மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ், கிருஷ்ணா தீக்சித், ஜே.எம் ஹாஜி ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமானது அல்ல. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடக அரசின் ஹிஜாப் தடை அரசாணை செல்லும், எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த 2 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பளித்த 3 நீதிபதிகளுக்கும் ஒய் பிரிவு பாதுகாப்பு ஏற்பாடு செய்து கர்நாடக மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.