சண்டிகர்: அமைச்சரவையின் முதல் கூட்டத்திற்கு பின்னர், பஞ்சாப் மாநிலத்தில் உடனடியாக 25 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில், ஆம்ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் முதல்வராக பகவந்த் மான் தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மேலும் நேற்று 10 எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். சண்டிகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அவர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நேற்று மாலையே முதல்வர் பகவந்த் மான் தலைமையில் அமைச்சரவை கூடியது. மாநிலத்தில் உடனடியாக 25 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வரின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘அமைச்சரவையின் இந்த முதல் கூட்டத்தில் 25 ஆயிரம் இளைஞர்களுக்கு உடனடியாக அரசு வேலை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் காவல் துறையில் மட்டும் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். மற்ற துறைகளில் மீதமுள்ள 15 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே அரசு பணியிடங்கள் நிரப்பப்படும். தவிர 2022-23ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை, கடந்த 2021-22ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட துணை மானியங்களுக்கான செலவினங்களுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட முடிவுகளும் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.