திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒன்றிய சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் நேற்று தரிசனம் செய்தார். பின்னர், கோயிலுக்கு வெளியே அவர் அளித்த பேட்டியில், ‘‘நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அசாதிகா அமித் மகோற்சவம் என்ற பெயரில் ஓராண்டுக்கு, ஏப்ரல் முதல் அடுத்தாண்டு ஏப்ரல் 20ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. 75வது சுதந்திர தினம் நிறைவு பெறக்கூடிய நாளில் நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றும் நிகழ்ச்சியை நடத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஜூன் 21ம் தேதி நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் யோகா மகோற்சவம் நடைபெற உள்ளது. இதில், 25 கோடி மக்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது,’’ என்றார். இதேபோல், ஒன்றிய ஒளிபரப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர மாநில முதன்மை செயலாளர் சமீர் சர்மா, வாழும் கலை இயக்கத்தின் குரு ரவிசங்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் நேற்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.