த . வளவன்
போர் மேகம் சூழ்ந்திருக்கும் உக்ரைனில் நிலைமை நாளுக்கு நாள் உக்கிரமாகி வருகிறது. இதனால் அங்கு மருத்துவம் படித்து வந்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் அரசின் முயற்சியால் “ஆபரேஷன் கங்கா” திட்ட வாயிலாக இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் மருத்துவ கனவு தகர்ந்துள்ளது. உக்ரைனில், ரஷ்யப் படையெடுப்பால் இந்த நிலை ஏற்பட்டது. ஆனால் பிலிப்பைன்சில் எந்தப் போரும் இல்லை. ஆனால் பிலிப்பைன்ஸ் மருத்துவ கல்வியை ஸ்தம்பிக்க வைக்கும் அளவில் இந்தியாவில் மருத்துவக் கல்வியை ஒழுங்குமுறைப்படுத்தும் “தேசிய மருத்துவ ஆணையம்” (National Medical Commission) சில மாதங்களுக்கு முன்னர் இட்ட உத்தரவுகள் அங்கு மருத்துவம் படித்து வந்த மருத்துவ மாணவர்களை நெருக்கடியில் தள்ளியுள்ளது. இது பற்றிய ஒரு அலசல் கட்டுரை.
இந்த கட்டுரை குறித்து புரிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் மருத்துவ கல்வி தொடர்பாக சில விஷயங்களை அறிந்து கொள்வது அவசியம். இந்தியாவில் மேல்நிலைக் கல்விக்கு (பிளஸ் 2) பின்னர், நீட் தேர்வு தகுதியுடன் 4. 5 வருடங்கள் மருத்துவம் பயில வேண்டும். அடுத்து ஹவுஸ் சர்ஜன் (House Surgeon)எனப்படும் ஒரு வருட பயிற்சி மருத்துவராக பணி புரிந்த பின்னர் இந்திய மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்து கொள்ளலாம். அதாவது ஒருவர் மருத்துவராக பணிபுரிய மொத்தம் 5.5 வருடங்கள் படிக்க வேண்டும். படித்து முடித்த பிறகு எம் பி பி எஸ் பட்டம் வழங்கப்படும்.
இந்த படிப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஆங்கிலேய கல்வி முறையை பின்பற்றும் நாடுகள் இளநிலை மருத்துவ படிப்பாக எம் பி பி எஸ் பட்டம் வழங்கும் நிலையில் அமெரிக்க கல்வி முறையை பின்பற்றும் நாடுகள் எம் டி பட்டத்தை இளநிலை மருத்துவ படிப்பாக அங்கீகரிக்கின்றன. அமெரிக்க கல்வி முறையை பின்பற்றி மருத்துவ பட்டம் வழங்கும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மருத்துவ படிப்பும் வித்தியாசமானது. உதாரணமாக இந்தியாவில் பிளஸ் டூ படித்து முடிக்கும் ஒரு மாணவர் நீட் தேர்வில் தகுதி பெற்ற பின்னர் பிலிப்பைன்ஸ் சென்று மருத்துவ படிப்பு படிக்க விரும்பினால் அங்கும் இங்குள்ள நீட் போன்ற என்மாட் (NATIONAL MEDICAL ELIGIBILITY TEST) எனும் தேர்வு எழுதி தேர்வு பெற வேண்டும்.
இங்கு மருத்துவ படிப்பு இரண்டு கட்டங்களாக பயிற்றுவிக்கப்படுகிறது. முதல் பகுதி பி. எஸ் (B.S) என்று அழைக்கப் படுகிறது. இதன் விரிவாக்கம் Bachelor of science என்பதாகும். இதை மருத்துவக் கல்விக்கு முன் கல்வியாக கருதுகிறார்கள். இதை Pre- medicine என்றும் பிரிட்ஜிங் படிப்பு என்றும் சொல்கின்றனர். இதன் கால அளவு 1.5 ஆண்டுகள். அடுத்ததாக 4. வருட எம் டி படிப்பு. ஆக மொத்தம் 5.5 ஆண்டுகள். இதற்கு பின்னர் இந்தியாவில் மருத்துவராக பணிபுரிய விரும்பும் மாணவர்கள் இந்திய அரசின் ஸ்கிரீனிங் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவராக ஒரு வருடம் பயிற்சி பெற முடியும். இதுநாள் கடந்த கல்வியாண்டு வரை இருந்த விதி.
இந்தியாவில் MBBS படிப்பு 60 மாதங்களுக்கும் மேலாக உள்ளது . அதாவது 4.5 வருட படிப்பு மற்றும் ஒரு வருட பயிற்சி மருத்துவர் (INTERNSHIP) பயிற்சி. இந்திய மருத்துவ கல்வியை கட்டுப் படுத்தி வந்த இந்திய மருத்துவ கழகம் (MEDICAL COUNCIL OF INDIA) பிலிப்பைன்ஸின் B S மற்றும் M D படிப்புகள் இரண்டையும் ஒரு பட்டதாரி மருத்துவப் படிப்புக்கான முழுமையான பாடத்திட்டமாக அங்கீகரித்து வந்தது. எனவே பிலிப்பைன்ஸில் BS உயிரியல் மற்றும் MD படிப்புகளை படித்து இந்தியா திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் பயிற்சி செய்வதற்காக ஸ்கிரீனிங் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது இந்திய மருத்துவ கழகத்தின் ( Medical Council of India ) திருத்தப் பட்ட பதிப்பாக உருவாகி இருக்கும் மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission)இந்த முறையை மாற்றியுள்ளதே பிரச்னைக்கு முக்கிய காரணம்.
இந்திய மருத்துவக் கவுன்சில் (MCI) பிலிப்பைன்ஸின் B.S மற்றும் MD படிப்புகள் இரண்டையும் ஒரு பட்டதாரி மருத்துவப் படிப்புக்கான முழுமையான பாடத்திட்டமாக ஒருங்கிணைத்து அங்கீகரித்து வந்தது. எனவே கடந்த வருடம் வரையில் பிலிப்பைன்ஸில் B S மற்றும் MD படிப்புகளை முடித்து இந்தியா திரும்பும் மாணவர்கள் இந்தியாவில் பயிற்சி மருத்துவராக அடிப்படை தகுதியான FOREIGN MEDICAL GRADUATE EXAMINATION எனப்படும் ஸ்கிரீனிங் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
லேட்டஸ்ட்டாக தேசிய மருத்துவ ஆணையம் பிலிப்பைன்சில் இருந்து பெறப்பட்ட மருத்துவ பட்டம் இரண்டு பிரிவுகளாக இருப்பதை ஏற்க மறுத்து, பி எஸ் படிப்பை மொத்த மருத்துவ படிப்புக்கான கால அளவில் இருந்து குறைத்து விட்டதால் மொத்த மருத்துவ படிப்பு வெறும் 4 வருடங்களாக குறைந்து போனது. அத்துடன் குறைந்த பட்சமாக 54 மாதங்கள் மருத்துவம் கற்பிக்கும் மருத்துவ படிப்பை படித்து முடித்து வருபவர்கள் மட்டுமே ஸ்கிரீனிங் தேர்வு எழுத முடியும். அதற்கு பின்னரே பயிற்சி மருத்துவராக பயிற்சி பெற முடியும் என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவால், 48 மாத கால MD படிப்பை படித்து வரும் பிலிப்பைன்ஸ் மருத்துவ மாணவர்கள் திகைத்து நிற்கின்றனர்.
மருத்துவப் படிப்புகளை ஒழுங்குபடுத்தும் தேசிய மருத்துவ ஆணையம் பிலிப்பைன்ஸ் கல்லூரிகளின் மருத்துவ படிப்பிற்கு முந்தைய பி எஸ் படிப்பை மருத்துவ கல்வியின் மொத்த கால அளவில் இருந்தது குறைத்துள்ளது. இதனால் பிலிப்பைன்சில் படித்த மருத்துவ மாணவர்களை இந்தியாவில் பயிற்சி பெற தகுதியற்றவர்களாக அறிவித்துள்ளது தேசிய மருத்துவ ஆணையம். தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த முடிவால் பிலிப்பைன்ஸில் படிக்கும் 10,000 க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் மருத்துவராகும் தகுதியை இழக்கும் நிலை உருவாகி உள்ளது. இதற்கு தேசிய மருத்துவ ஆணையம் (NMC) இயற்றிய உத்தரவே காரணம்.
இந்திய மருத்துவ ஆணையம் (NMC) பிலிப்பைன்ஸில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட வேண்டிய மருத்துவக் கல்வியின் ஒரு பகுதியாக இளங்கலை அறிவியல் பாடத்தை (பி எஸ் உயிரியல்) கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று கூறியுள்ளது. B. S என்பது 1.5 வருட படிப்பாகும். இது பிலிப்பைன்ஸில் உள்ள ஒவ்வொரு மாணவரும் டாக்டர் ஆப் மெடிசின் (MD) எனப்படும் நான்கு வருட, அதாவது 48 மாத கால பிரதான படிப்பை படிப்பதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய படிப்பாகும்.
இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் உள்ள என்எம்சி அலுவலகத்திற்கு வெளியே தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு தேசிய மருத்துவ ஆணையம் எந்த பதிலும் தராததால் மாணவர்களும், கல்வியாளர்களும் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். முதல் இரண்டு ஆண்டுகள் செல்லாததாக்கும் என்எம்சி யின் இந்த திடீர் உத்தரவு சட்டவிரோதமானது என்றும், இந்தியாவில் மருத்துவராக வேண்டும் என்ற தங்கள் கனவுகளை சிதைப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் பிலிப்பைன்சில் மருத்துவம் படித்து வரும் இந்திய மாணவர்கள்.
N M C வழிகாட்டுதல்கள் குறித்த விளக்கங்கள்
கடந்த 2021 நவம்பர் 18,அன்று, N M C (தேசிய மருத்துவ ஆணையம்) வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கு உரிம விதிமுறைகளை அறிவித்துள்ளது, இது உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மீறும் வகையில் பல விதிகளை கொண்டிருப்பதற்காக பல்வேறு நீதிமன்றங்களில் மாணவர்களால் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் MBBS படிப்பு கிட்டத்தட்ட 65 மாதங்கள். 4.5 வருட படிப்பு மற்றும் ஒரு வருட இன்டர்ன்ஷிப். தேசிய மருத்துவ ஆணையத்தின் சமீபத்திய விதிமுறைப்படி, வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட மருத்துவ படிப்பு குறைந்தபட்சமாக 54 மாதங்கள் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் தான் இந்தியாவில் பயிற்சி செய்வதற்கான தகுதியை மருத்துவ மாணவர்கள் அடைய முடியும். பிலிப்பைன்ஸின் 48 மாத கால MD படிப்பு இந்த அளவுகோலை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை.
கடந்த ஆண்டு வரை இந்திய மருத்துவக் கவுன்சில் (MCI) பிலிப்பைன்ஸின் BS மற்றும் MD படிப்புகள் இரண்டையும் ஒரு பட்டதாரி மருத்துவப் படிப்புக்கான முழுமையான பாடத்திட்டமாக ஒருங்கிணைத்து அங்கீகரித்து வந்தது. எனவே முந்தைய இந்திய மருத்துவ கழக ஆட்சியின் கீழ், பிலிப்பைன்ஸில் BS மற்றும் MD படிப்புகளை படித்து இந்தியா திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் பயிற்சி மருத்துவராக ஸ்கிரீனிங் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 2021 ம் வருடம், நவம்பர் 18ம் தேதிக்கு முன்னர் MD நான்கு வருட படிப்பில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மாணவர்களைப் பாதுகாப்பதாக N M C கூறுகிறது. இதனால் வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர்கள் இரண்டு வகை மாணவர்களுக்கு தான் பிரச்சனை என்று கூறுகிறார்கள். நவம்பர் 18, 2021 க்குப் பிறகு எம்.டி. திட்டத்தில் சேர்க்கை பெற்றவர்கள் இதில் முதல் ரகம். இரண்டாம் வகை மாணவர்கள், 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பி எஸ் படிப்பு முடித்த பிறகு எம்.டி.யில் சேர்ந்து இந்தியா வந்தவர்கள். BS படிப்பில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மாணவர்களை பாதுகாப்பதில் சிரமங்கள் இருப்பதாகவும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இது மாணவர்களை குழப்புவதாக பிலிப்பைன்ஸில் உள்ள கல்லூரிகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு உதவிய வெளிநாட்டு கல்வி ஆலோசகர் டாக்டர். ராஜா தங்கப்பன் கூறுகிறார். இவர் சமீபத்தில் தேசிய மருத்துவ ஆணையத்தின் முன்பு நடந்த போராட்டத்தில் மாணவர்களுடன் போராடியவர். அவரிடம் பேசினோம்.
என்எம்சியின் இந்த அறிவிப்பு பிலிப்பைன்ஸில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகியுள்ளது. இந்த படிப்புகளுக்கு அவர்கள் ஏற்கனவே செய்த அதிக செலவு காரணமாக அவர்கள் பெற்றோர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பிலிப்பைன்ஸில் மருத்துவக் கல்விக்கான மொத்த செலவு பல்வேறு பல்கலைக்கழகங்களில் ரூ.20 லட்சம் முதல் ரூ.30-35 லட்சமாக உள்ளது. பல மாணவர்கள் ஏற்கனவே பிலிப்பைன்ஸ் கல்லூரிகளில் கணிசமான தொகையை கல்விக் கட்டணமாக செலுத்தியுள்ளனர். N M C தனது புதிய விதியை செயல்படுத்த விரும்பினால், இந்த அறிவிப்பை செய்யும் முன்னர் BS படிப்பில் ஏற்கனவே சேர்க்கை பெற்ற மாணவர்களின் வாழ்க்கையை பாதிக்காத வகையில் தனது அறிவிப்பில் சில திருத்தங்கள் செய்திருக்கலாம். தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த முடிவில் அரசாங்கம் தலையிட்டு, N M C யின் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்,
தேசிய மருத்துவ ஆணையத்தின் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி உரிம விதிமுறைகள்- 2021 ல் பல விதிகள் முரணாக உள்ளன. அவை நீதித்துறை மறுஆய்வு க்கு உட்படுத்தப் பட வேண்டும். தேசிய மருத்துவ ஆணையம் தனது அதிகாரங்களை மீறி விதிமுறைகளை உருவாக்கி வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை பாரபட்சமாக நடத்துகிறது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த கட்டுப்பாடு வெளிநாட்டில் இருந்து இளங்கலை மருத்துவ படிப்புகளை தொடர விரும்பும் அல்லது ஏற்கனவே படித்து வரும் மாணவர்களை பாரபட்சமான முறையில் நடத்துகிறது. இந்த ஒழுங்குமுறையானது இந்தியச் சட்டத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட செயல்பாட்டைக் கொண்டிருக்கிறது. ஏனெனில் இது வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்களின் மருத்துவக் கல்வி பாடத்திட்டம். அது தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்த எம்பிபிஎஸ் பாடத்திட்டத்துடன் ஒத்துப்போக வேண்டும் என்பது எங்கேயோ இடிக்கிறது.
இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் ஜே. சாய் பிரசன்னா வழக்கின் மே 2011 தீர்ப்பில் உச்ச நீதிமன்றத்தின் அதிகார பூர்வமான தீர்ப்புக்கு எதிராக என்எம்சி செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மருத்துவக் கல்லூரி வழக்குகளுடன் தொடர்புடைய மூத்த வழக்கறிஞர் ரஞ்சனின் கருத்தை ஏற்றுக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் “இந்தியாவுக்கு வெளியே எந்த நாட்டிலும் மருத்துவ கல்வி நிறுவனங்கள் வழங்கிய மருத்துவ பட்டத்தின் அங்கீகாரத்தை ஆய்வு செய்வதற்காக, மருத்துவ கல்வி நிறுவனம் அமைந்துள்ள நாட்டின் நெறிமுறைகள் ஆய்வு செய்யப் பட வேண்டும். மேலும் இந்திய மருத்துவக் கழகங்கள் தொடர்பான இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1956-ன் படி பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் செயல்படுத்தப்பட வேண்டும். பிலிப்பைன்ஸில் மருத்துவக் கல்வியை தொடரும் மாணவர்களின் கதி என்ன என்ற கேள்விகளுக்கு என்எம்சி பதிலளிக்கவில்லை, என்று கூறப்பட்டுள்ளது.இந்த தேசிய மருத்துவக் குழு கொள்கை வழிகாட்டுதல்கள் பிலிப்பைன்ஸில் மருத்துவம் படிக்கும் பத்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்களின் வாழ்க்கையை நிர்க்கதியாக்கி விடுமோ என்ற பயத்தை அளிக்கிறது.
கடந்த 2022 வருடம், பிப்ரவரி 28ம் தேதி பிலிப்பைன்ஸில் உள்ள இந்தியத் தூதரகத்தை தேசிய மருத்துவ ஆணையம் தொடர்பு கொண்டு வெளியிட்ட புதிய அறிவுரையின் காரணமாக இந்திய மருத்துவ மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர். 18 நவம்பர் 2021 க்கு முன் பிலிப்பைன்ஸில் MD படிப்புக்கு அனுமதி பெற்ற மாணவர்கள் மட்டுமே இந்தியாவில் மருத்துவப் பயிற்சி பெற பதிவு செய்வதற்கான தகுதியை பூர்த்தி செய்தவர்களாக கருதப்படுவார்கள் என்று இந்த உத்தரவு கூறுகிறது. மருத்துவப் படிப்பின் காலக் கணக்கீட்டில் பிரிட்ஜிங் படிப்பு சேர்க்கப்படாது என்றும் அது கூறுகிறது.
பிலிப்பைன்ஸில் மருத்துவக் கல்வியைத் தொடர முடிவு செய்த மாணவர்கள், மருத்துவ கவுன்சில் வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி தங்கள் சேர்க்கையை உறுதி செய்துள்ளனர். கடந்த 05/04/2019 தேதி MCI வெளியிட்ட பொது அறிவிப்பில் நீட் தேர்வில் ஒரு முறை தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள், அவருடைய NEET மதிப்பெண் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும் என சொல்லப்பட்டுள்ளது. அத்தகைய விண்ணப்பதாரர்கள் MBBS அல்லது அதற்கு இணையான மருத்துவப் படிப்பைத் தொடர, முன் மருத்துவ படிப்பு ஏதேனும் இருந்தால் அதுவும் மருத்துவ படிப்பின் கால அளவில் சேர்த்துக் கொள்ளப் படும் என தெளிவாக குறிப்பிடப் பட்டதால் தான் இத்தனை ஆண்டுகளாக இந்திய மாணவர்கள் பிலிப்பைன்ஸ் சென்று மருத்துவம் பயின்று மருத்துவ படிப்பை தொடர்ந்துள்ளனர். இந்த விஷயத்தில் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு தேசிய மருத்துவ ஆணையத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும், என்றார்.