முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக நியமித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள எம்.பி.க்கள் இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் வருகிற 31ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் 5 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் 117 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டெல்லி ஜல் போர்டு துணைத் தலைவர் ராகவ் சதா, ஐஐடி பேராசிரியர் டாக்டர் சந்தீப் பதக் மற்றும் லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அசோக் மிட்டல் ஆகிய 5 பேரை ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக அறிவித்துள்ளது. இதன்மூலம் மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் பலம் 3ல் இருந்து 8 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரும், பாஜி என்று அழைக்கப்படுபவரான ஹர்பஜன் சிங், 1998-ம் ஆண்டு அணியில் அறிமுகமானார். ஏறக்குறைய 23 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைபிரியாமல் பயணித்த அவர், கடந்த ஆண்டு டிசம்பரில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: “எது எப்போது நிகழும், அது நம்மை எப்படி பாதிக்கும் என மதிப்பிடவே முடியவில்லை”- மோடி பேச்சு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM