சென்னை:
வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
இது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயலாகவும் உருவெடுத்தது. இந்த புயலுக்கு அசானி என்று பெயரிடப்பட்டது.
அசானி புயல் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், வடக்கு அந்தமான் கடற்பகுதியில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த புயல், அங்கிருந்து மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்கிறது.
இதன்காரணமாக அந்தமான் தீவுகளில் போர்ட் பிளேருக்கு கிழக்கு, தென்கிழக்கு பகுதியில் சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் இது அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரித்துள்ளது.
அந்தமான் கடலில் அதிதீவிர புயலாக உருவெடுக்கும் அசானி, அடுத்த 48 மணி நேரத்தில் அந்தமான் தீவுகளை ஒட்டி வடக்கு நோக்கி மியான்மர் கடற்கரை நோக்கி நகரும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதன்காரணமாக அந்தமான் தீவுகளில் கடல் கொந்தளிப்பும், கனமழையும் பெய்யும் எனவும் எச்சரித்துள்ளது.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் அசானி புயலால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அங்கு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து அரக்கோணம் கடற்படை தளத்தில் இருந்து 130 வீரர்களை கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அந்தமான் சென்றனர். துணை காமாண்டர் வைத்தியலிங்கம் தலைமயில் சென்ற குழுவினர், தங்களுடன் அதிநவீன கருவிகளையும் எடுத்து சென்றுள்ளனர்.நேற்று அவர்கள் அங்கு பொதுமக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.
இதற்கிடையே தமிழகத்தில் இருந்து அந்தமான், நிகோபார் பகுதிகளுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மற்றும் கேரளாவில் இருந்து கடலுக்கு சென்றவர்களும் உடனடியாக கரை திரும்பவேண்டும் என்று கடற்படையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
அசானி புயல் அதிதீவிரமாக மாறியதை தொடர்ந்து தமிழக கடலோர பகுதிகளில் சூறைக்காற்றும், கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதையடுத்து தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
அசானி புயல் சின்னம் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பணம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.
இதுபோல கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. அடுத்த 3 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்… இந்தியாவில் தொடர்ந்து வீழ்ச்சி- கொரோனா ஒருநாள் பாதிப்பு 1,549 ஆக குறைந்தது