விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள எதிர்கோட்டையைச் சேர்ந்தவர்கள் சுப்புராஜ் – முத்துலட்சுமி தம்பதி. இவர்கள் மகன் நவநீத கண்ணனுக்கும், இனாம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் – விஜயலட்சுமி தம்பதியின் மகள் அனிதாவுக்கும் எதிர்கோட்டையில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வகையில் மணமகனின் நண்பர்கள் அவருக்குக் கல்யாண சீர் வரிசையாக 500-க்கும் மேற்பட்ட புத்தகங்களை கொடுத்து ஆச்சர்யப்படுத்தினர். இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து புதுமாப்பிள்ளை நவநீத கண்ணனிடம் பேசினோம்.
“என் சொந்த ஊர் எதிர்கோட்டைதான். தெர்மல் இன்ஜினீயரிங்ல எம்.இ. முடிச்சிட்டு சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில முதுநிலை ஆட்டோமொபைல் வடிவமைப்புப் பொறியாளரா வேலை செய்யுறேன். ஊர்ல இருந்தவரை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்துல (டைபி) உறுப்பினரா செயல்பட்டு வந்தேன். சென்னை போனதுக்கப்புறம் சங்கத்தில் என்னோட செயல்பாடு குறைஞ்சுட்டாலும் நட்பெல்லாம் அப்படியேதான் இருந்துச்சு.
அனிதா, எம்.பி.ஏ பட்டதாரி. எங்க கல்யாணத்துக்கு உறவினர்கள், நண்பர்கள், என்கூட வேலை செய்யுறவங்க, சங்கத் தோழர்கள்னு எல்லாரும் வந்திருந்தாங்க. நானும், அனிதாவும் மேடையில் நின்னுக்கிட்டு இருந்தப்போ, திடீர்னு மண்டபத்துக்கு வெளியில் கொட்டு சத்தம் கேட்டுச்சு. `என்னடா, எல்லா விசேஷமும் முடிஞ்சு நாம மேடையில நின்னுக்கிட்டு இருக்கோம்… இப்ப யாரு, எதுக்குக் கொட்டடிக்கிறாங்க’னு நினைச்சுட்டே பார்த்தா, நண்பன் ஒருத்தன் தப்படிச்சிக்கிட்டு மண்டபம் உள்ள வந்தான். தொடர்ந்து, சின்னப் பசங்க தாம்பாளத்துல புத்தகத்தை வெச்சு சீர எடுத்துட்டே உள்ளே நுழைஞ்சாங்க. அவங்களைத் தொடர்ந்து என் நண்பர்கள், டைபி தோழர்கள், உறவுக்காரங்க, தெருப் பசங்கனு எல்லாரும் வரிசையா தாம்பாளத்துல புத்தக சீர் கொண்டு வந்தாங்க. அதைப் பார்த்தப்போ சந்தோஷம், ஆச்சர்யம், பெருமைனு நான் உணர்ந்ததை வார்த்தைகள்ல சொல்லத் தெரியல.
எத்தனையோ கல்யாண வீடுகளில், நானும் நண்பர்களும் சேர்ந்து மணமக்களுக்கு கிஃப்ட் கொடுத்திருக்கோம். அப்போயெல்லாம் எனக்கு இப்படி ஒரு ஐடியா தோணுனது இல்ல. ஆனா என் கல்யாணத்துக்கு புத்தகங்களை சீராகக் கொண்டு வந்து அசத்தின என் நண்பர்களை எவ்ளோ கொண்டாடுறதுனு தெரியல.
நான் ஒரு புத்தகப் பிரியன். என் வீட்டுல கிட்டத்தட்ட 700 புத்தகங்களை வெச்சிருக்கேன். இப்போ என் கல்யாணத்துல சீர் கொடுத்த 500 புத்தகங்களும் அதில் சேர்ந்திருக்கு. இதில் முக்கியமான விஷயம் என்னன்னா, சீராகக் கொடுத்த புத்தகங்கள் எல்லாமே கதை, சிறுகதை, இலக்கியம், நாடகம், பிரபல மொழிபெயர்ப்பு நூல்கள், சாகித்திய அகடமி விருது பெற்ற புத்தகங்கள் தேடக் கிடைக்காத புத்தகங்கள். இதை எனக்காக தேடிக்கொண்டு வந்த நண்பர்கள்தான் எனக்கு வாழ்க்கையில கிடைச்ச மிகப்பெரிய கிஃப்ட்.
சீர் கொண்டு வந்த புத்தகங்களை மேடையில அடுக்கி வெச்சு நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து வாழ்த்தினப்போ, மண்டபத்தில் இருந்த எல்லாருமே ரொம்ப ரசிச்சாங்க. கைதட்டி ஆரவாரம் பண்ணினாங்க. அந்த மொமன்ட் ரொம்பவே அழகா இருந்துச்சு. என் மனைவி அனிதா என்னையும் நண்பர்களையும் பெருமையா பார்த்தாங்க. என் வாழ்க்கையின் முக்கியமான தருணத்தை நெகிழ்ச்சியா ஆக்கின என் நண்பர்களுக்கு ரொம்பவும் கடமைப்பட்டிருக்கேன்.
அறிவுக்கும் விழிப்புணர்வுக்கும் புத்தகங்கள்தான் வாசல். வரலாறு, சமகால அரசியலை தெரிஞ்சுக்கிறதுல தொடங்கி, வாழ்க்கைப் பாடம் சொல்லிக்கொடுக்குற வரை புத்தகங்களைப் போல நெருக்கமான ஆசான் இல்லை” என்றார்.
புத்தக சீர் ஐடியா குறித்து மாப்பிள்ளையின் தோழர் முகம்மது சிராஜுதீனிடம் பேசினோம். “எங்க கேங்ல ஒரு வழக்கம் உண்டு. எங்க நண்பர்கள் யாருக்காவது கல்யாணம்னா அந்த கல்யாணத்துல வந்துட்டுப்போற விருந்தாளிகளுக்கு பழ தாம்பூலத்தோடு சேர்த்து புத்தகங்களையும் பரிசாகக் கொடுப்போம்.
ஆனா இந்த முறை, மாப்பிள்ளைக்குப் புத்தக சீர் கொடுக்க முடிவெடுத்தோம். ஆளாளுக்கு 1000, 2000 ரூபாய்னு கொடுக்க, 25,000 ரூபாய் சேர்ந்துச்சு.
காசை எடுத்துட்டு நேரா போய் 500 புத்தகங்களை வாங்கிட்டு வந்துட்டோம். ஆனா அது இவ்வளவு சூப்பரா ஒர்க் அவுட் ஆகும்னு எதிர்ப்பார்க்கலை. மண்டபத்துலேயே செம ரெஸ்பான்ஸ். தொடர்ந்து முகநூல், வாட்ஸ்அப்னு டிரெண்ட் ஆச்சு. எங்களுக்கெல்லாம் செம ஹேப்பி. இனியும் இதை தொடரவிருக்கோம்” என்றார்.