ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்காலிக நிதியமைச்சராக இருந்தவர் இன்று அமெரிக்காவில் தனது அன்றாடப் பிழைப்புக்காக உபேர் கேப் டிரைவராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
அமெரிக்கக் கூட்டுப்படையினர் வசம் ஆப்கானிஸ்தான் இருந்தவரை தலிபான்கள் உள்ளே வர முடியாமல் தவித்து வந்தனர். தலிபான்களை ஒழிக்கிறோம் என்ற பெயரில் அமெரிக்கப் படையினர் ஆப்கானிஸ்தானை நாசமாக்கியதுதான் மிச்சம். இதற்கு மேலும் தங்களால் பணத்தை செலவழித்துக் கொண்டிருக்க முடியாது என்பதால், ஆப்கானிஸ்தானை விட்டே போய் விட்டது அமெரிக்கா.
ஆப்கானிஸ்தானை அமெரிக்கா கைவிட்டதைத் தொடர்ந்து தலிபான்கள் உள்ளே புகுந்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டனர். இதையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆப்கானிஸ்தான் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. மனிதாபிமான உதவிகளை இந்தியா போன்ற சில நாடுகள் செய்து வருகின்றன. இந்தியா வழங்கும் கோதுமைதான் அப்பாவி ஆப்கானிஸ்தான் மக்களின் வயிற்றுப் பசிய ஓரளவுக்குப் போக்கி வருகிறது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தொடர்பான ஒரு பரிதாபக் கதை அமெரிக்காவிலிருந்து வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பிரதமர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆட்சி இருந்தபோது தற்காலிக நிதியமைச்சராக இருந்தவர்
காலித் பயேன்டா
. இவர் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி தனது பதவியிலிருந்து விலகினார். அப்போதுதான் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. பதவி விலகிய பின்னர் அவர் அமெரிக்காவுக்குப் போய் விட்டார். இவர் பதவி விலகிய ஒரு வாரத்திலேயே காபூலை தலிபான்கள் பிடித்துக் கொண்டனர்.
இந்த காலித் பயேன்டா தற்போது அன்றாடப் பிழைப்புக்காக அமெரிக்காவில் உபேர் கார் டிரைவராக இருந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நபர் இவர். இன்று கால் டாக்சி டிரைவராக இருந்து வருகிறார் என்பது ஆப்கான் மக்களை அதிர வைத்துள்ளது. வாஷிங்டன் நகரில் இவர் டாக்சி டிரைவராக இருந்து வருகிறார். தனது குடும்பத்தைக் காக்க இதை தவிர தனக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 6 மணி நேரம் வேலை செய்தால் 150 டாலர்களுக்கு மேல் சம்பாதிக்க முடியும். அது எனது குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளுக்கு ஓரளவுக்கு உதவியாக உள்ளது. எனது குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நியாயமான எந்த வேலையையும் செய்ய நான் தயாராகவே இருக்கிறேன். அதை மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஆப்கானிஸ்தானின் இன்றைய பரிதாப நிலைக்கு அமெரிக்காதான் காரணம். திடீரென படைகளை விலக்கியதால்தான் தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் போய் விட்டது என்றார் அவர்.
அமைச்சர் பதவியை விட்டு விலகியதுமே தனது உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்காவுக்குப் போய் விட்டார் காலித். அவரது குடும்பத்தினர் ஏற்கனவே அமெரிக்காவுக்குப் போயிருந்தனர். தற்போது கார் டிரைவராக பணியாற்றி தனது குடும்பத்தினரைக் காப்பாற்றி வருகிறார் காலித்.