தெலங்கானாவில் போதன் நகரில் உள்ள அம்பேத்கர் சந்திப்பில் சனிக்கிழமை இரவு சிவசேனா மற்றும் பாஜக தொண்டர்களால் சத்ரபதி சிவாஜி சிலை நிறுவப்பட்டதற்கு எழுந்த எதிர்ப்புகள் வன்முறையாக மாறியதையடுத்து அங்கே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் போத்தன் நகராட்சி சிவாஜி சிலையை நிறுவ ஒப்புக்கொண்டது. ஆனால், அந்த இடத்தை அடையாளம் காணவில்லை அல்லது அம்பேத்கர் சந்திப்பில் நிறுவ அனுமதி வழங்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி உறுப்பினர்கள் மற்றும் சில உள்ளூர் சிறுபான்மை அமைப்புக்கள் சிலையை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. நகராட்சி அதிகாரிகளின் அனுமதி பெற்ற பிறகே சிலையை நிறுவ வேண்டும் என்றனர்.
வன்முறையாக மாறியது ஏன்?
அந்த இடத்தில் சிவாஜி சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர் போராட்டக்காரர்கள் வந்தனர். விரைவில், இந்த விவகாரம் ஒரு பக்கம் ஏ.ஐ.எம்.ஐ.எம் மற்றும் டி.ஆர்.எஸ் ஆதரவாளர்களுடனும், மற்றொரு பக்கம் பாஜக-சிவசேனா ஆதரவாளர்களுடனும் அரசியலாக மாறியது. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கினர். இதில், பல போலீசார் காயம் அடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையைக் கலைத்தனர்.
இப்போது நிலைமை எப்படி இருக்கிறது?
அங்கே 4 பேருக்கு மேல் கூடுவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைதியான மற்றும் பதற்றம் நிறைந்த பகுதிகள் என போதன் நகரம் முழுவதும் போலீஸ் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காண போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அனைத்து குழுக்களிடமும் பேசி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“