`ஆடுகளம்' சேவல் சண்டை; `வாடிவாசல்' மாடுகளின் வாழ்வியல்! – சீக்ரெட் சொல்லும் உதவி இயக்குநர் கருணாஸ்

வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் உருவாகிவரும் ‘வாடிவாசல்’ படத்தின் மூலம் உதவி இயக்குநாகிறார் நடிகர் கருணாஸ். இப்போது ஹீரோவாக ‘ஆதார்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து முடித்துவிட்டு, ‘வாடிவாசல்’ டெஸ்ட் ஷூட்டிலிருந்து உதவி இயக்குநராகவும் களமிறங்கிவிட்டார். திரைத்துறையில் புதுப்பயணத்தை ஆரம்பித்திருக்கும் கருணாஸிடம் பேசினேன்.

வாடிவாசல் டெஸ்ட் ஷூட் பூஜையின் போது…

“வெற்றிகிட்ட உதவி இயக்குநர் ஆகியாச்சு. பாடகர், இசையமைப்பாளராக இருந்த நான் நடிகரானேன். அரசியலுக்கு வந்தேன். தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 150 படங்கள் நடிச்சிருப்பேன். எப்பவும் நான் நடிக்கும்போது மானிட்டர் பக்கம் போய், எப்படி வந்திருக்குன்னு பார்த்ததில்ல. ஏன்னா அது இயக்குநரோட வேலை. சரியா வந்தா ஷாட் ஓகே ஆகும். சரியா நடிக்கலைன்னா ரீடேக் எடுப்பாங்க. நான் மானிட்டர் பார்க்க ஆரம்பிச்சேனா, அப்புறம் டைரக்‌ஷன்ல தலையீடு பண்ண ஆரம்பிச்சிடுவேன்னு அப்ப ஒரு பயம் இருந்தது. ஆனா, நல்ல சினிமாக்களைப் பார்க்கும்போது, அது மாதிரி ஒரு படம் இயக்க வேண்டும்னு விரும்பியிருக்கேன். சத்யஜித்ரே, பாலுமகேந்திரா, பாரதிராஜான்னு இவங்களோட இயல்பான யதார்த்த சினிமாக்களைப் பார்த்து இயக்குநர் ஆகணும்னு தோணியிருக்கு.

அதுவும் சமீபத்திய ‘தேன்’, ‘கடைசி விவசாயி’, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’, ‘ஆதார்’னு படங்களைப் பார்க்கும்போது, நாமளும் அப்படிப் படம் இயக்கணும்னு தோண ஆரம்பிச்சிடுச்சு. ஓடிடி வந்த பிறகு அதுக்கான களமும் இருக்கு. அதனால துணிஞ்சு இந்தப் புதுப்பயணத்தை ஆரம்பிச்சிட்டேன்.

வெற்றிமாறன்

நான் இத்தனை படங்கள்ல நடிச்ச பிறகும்கூட, ஒரு உதவி இயக்குநரா என் பணியை ஆரம்பிக்கணும்னு நினைக்கும்போது அந்த இயக்குநர்கிட்ட எனக்கான மரியாதையும் கிடைக்கணும். அதுக்கு சரியான இயக்குநரா இருப்பார்னு நினைச்சு, வெற்றிகிட்ட சேர்ந்திருக்கேன். ஏன்னா அவர் என் நீண்ட கால நண்பர். அவர்கிட்ட எனக்கான மரியாதை கிடைக்கும். ‘ஆடுகளம்’ல வெற்றிக்கு தேசிய விருது கிடைச்சது, சண்டக்கோழிகளின் உலகத்தைச் சொன்ன மாதிரி இந்த ‘வாடிவாசல்’ மாடுகளின் வாழ்வியலைச் சொல்லும். ‘வாடிவாசல்’ என் மண்ணின் களம்ங்கறதால, என் மண்ணின், மாடுகளின் கலாசாரத்தைச் சொல்லும் படம்ங்கறதால விரும்பி வேலை செய்யறேன்! வெற்றிக்கிட்ட பாராட்டு வாங்கும் அளவுக்கு வேலை பார்க்கணும். வாடிவாசல் படம் வெளியான பிறகு அதோட தாக்கம் பத்து வருஷமாவது இருக்கும்” என்கிறார் கருணாஸ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.