ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம் காத்தான் ஊராட்சி சேதுபதி நகரில் புதிய ஆட்சியர் அலுவலக வளாகம் அமைந்திருக்கிறது. மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கட்டடத்தில் ஆட்சியர் அலுவலகம், டி.ஆர்.ஓ., கூடுதல் ஆட்சியர், துணை ஆட்சியர்கள், தேர்தல் பிரிவு, மக்கள் தொடர்பு மையம் என பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கு 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
ராமநாதபுரம் ஆட்சியராக சங்கர்லால் குமாவத் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலகங்களின் கழிப்பிடங்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால், சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும், கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் வெளியேறி ஆட்சியர் வளாக கட்டடத்தின் பின்புறத்தில் தேங்கிக் நிற்பதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும், ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கும் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் சிலர், “செப்டிக்டேங் நிரம்பி கழிவறைகளுக்குள் கழிவுநீர் புகுவதால் அவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உயர் அதிகாரிகள் உட்பட அலுவலக ஊழியர்கள் அனைவரும் இயற்கை உபாதைகளைக் கழிக்க கார், மோட்டார் சைக்கிளில் வீடுகளுக்கும், பொதுவெளிக்கும் செல்ல வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கழிவறைகள் பராமரிக்கப்படாததால் பெண் ஊழியர்கள் வெளியில் சொல்லமுடியாத துயரத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமலிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் தமிழகத்தில் சுகாதாரத்தில் சிறந்த மாவட்டமாக விளங்குவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது வழங்கியுள்ளார். முதலமைச்சர் இந்த விருதை எதனடிப்படையில் கொடுத்தார். ஒருமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேரில் வந்து பார்த்திருந்தால் கண்டிப்பாகக் கொடுத்திருக்க மாட்டார்” என ஊழியர்கள் முணுமுணுத்தபடி சென்றனர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், “மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது. அதற்காகப் பலகோடி ரூபாய் சிறப்பு நிதி அளித்து வருகிறது. அதன்படி வளரும் மாவட்ட பட்டியலில் உள்ள ராமநாதபுரத்தில் சுகாதார திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும் சுற்றுச்சூழல் துறையை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் சுகாதார திட்டமான பயோ செப்டிக் டேங்க் உள்ளிட்ட எந்த சுகாதார நவீன திட்டங்களும் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் உட்பட எந்த அலுவலகங்களிலும் செயல்படுத்தப்படவில்லை. ஆனால், சுகாதாரத்திற்கென மாதந்தோறும் கோடிக்கணக்கில் செலவிடுவதாகப் பதிவேடுகளில் மட்டும் கணக்குக் காட்டப்படுகிறது. மாவட்டத்தின் முதன்மை அரசு அலுவலகமான மாவட்ட ஆட்சியர் அலுவலகமே இந்த நிலையில் இருக்கும் போது, தமிழக அரசு எதனடிப்படையில் இந்த மாவட்டத்துக்கு விருது கொடுத்தது என்று தெரியவில்லை” என்றனர்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிலவும் இந்த சுகாதாரச் சீர்கேடு குறித்து நம்மிடம் பேசிய பெண் ஊழியர்கள் சிலர், “இங்கு நிலவி வரும் சுகாதாரச் சீர்கேடு குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறிவிட்டோம். ஆனால், யாரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையில், மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்ட ஆய்வுக்குழு விரைவில் ராமநாதபுரத்திற்கு வர உள்ளதாகவும், இதுவரை இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் செயல்படுத்தியுள்ள திட்டங்களை நேரில் பார்வையிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை மத்திய அரசின் தூய்மை இந்தியாத் திட்டப் பட்டியலில் சுகாதாரத்தில் 50 இடங்களுக்குள் இடம்பெற்ற ராமநாதபுரம் மாவட்டம், கடந்த ஆண்டு 105-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. நடப்பாண்டில் கடைசி இடத்துக்கும் தள்ளப்படலாம், அதற்கும் விருது கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்றனர் ஆதங்கமாக.