மரியுபோல் நகரில் சரணடைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை என உக்ரைன் திட்டவட்டமாக முடிவெடுத்துள்ள நிலையில் ரஷ்யாவுடன் தொடர்ந்து மல்லுகட்டி வருகின்றது.
உக்ரைன் மீது ரஷ்யா 26-வது நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக துறைமுக நகரான மரியுபோலை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
அதிநவீன ஹைபர்சானிக் ஏவுகணை
மரியுபோல் பகுதியிலுள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் அடைக்கலம் புகுந்த 400 உக்ரைன் குடிமக்கள் மீது ஹைபர்சானிக் ஏவுகணை ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒலியின் வேகத்தைக் காட்டிலும் 5 மடங்கு அதிக வேகத்தில் சீறிப் பாய்ந்து வந்து தாக்கும் இந்த அடுத்த தலைமுறை அதிநவீன ஹைபர்சானிக் ஏவுகணை பலத்த சேதத்தை ஏற்படுத்த கூடிய ஆபத்தான ஆயுதமாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில்தான் உக்ரைன் ராணுவ வீரர்கள் மரியுபோல் நகரில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, சரணடைய வேண்டும். இல்லையெனில் பேரழிவை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
ஆனால், சரணடைய மாட்டோம் என 26வது நாள் போர் தாக்குதல் தொடர்ந்து நடக்கும் நிலையில் உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சக் தெரிவித்துள்ளார்.
மரியுபோல் நகரை கைப்பற்றுவதில் ரஷ்யா ஆர்வம் காட்டுவது ஏன்?
ஆயுதங்களை கீழே போடுவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. இதுகுறித்து ஏற்கனவே, நாங்கள் ரஷ்யாவுக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என இரினா தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அதிகமாக ரஷியன் மொழி பேசுபவர்களை கொண்ட மரியுபோல் நகரை கைப்பற்றுவதில் ரஷ்யா ஆர்வம் காட்டுகிறது.
இந்த நகரை கைப்பற்றினால் ஏற்கனவே கைப்பற்றி தங்களுடன் இணைத்துள்ள கிரிமியாவிற்கு ரஷ்யா படைகள் சென்று வர முக்கிய வழித்தடமாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.