`இந்தியாவுக்கே தமிழ்நாடு மாடல்தான் முன்னோடியா?' – தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் பதில்!

அண்மையில் நடந்து முடிந்த 5-வது நாணயம் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார், இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன். சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்த அவர், அதற்கு முன்பாக இந்திய பொருளாதாரத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் சுணக்கம், உக்ரைன் – ரஷ்ய போர் ஏற்படுத்தும் தாக்கம், இந்தப் பொருளாதார மந்தநிலையை சமாளிக்க மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவான உரையாற்றினார். அதன்பின்பு விகடன் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசனுடன் தற்போதைய பொருளாதார சூழல் குறித்தும் உரையாடினார். அந்த உரையாடலில் இடம்பெற்ற முக்கியமான கேள்விகளும், பதில்களும் இங்கே…

“தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்களில் (Welfare Schemes) சிலவற்றை இன்று இந்திய அரசும் பின்பற்றுகிறது. பல மாநிலங்களிலும் இதைக் காணமுடிகிறது. அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேர்தலிலும், இந்த `தமிழ்நாடு மாடல்’தான் தாக்கம் பெரியளவில் தாக்கத்தையும், சீற்றத்தையும் ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேசத்தை `மினி இந்தியா’ என அழைக்கிறார்கள்; அப்படியெனில், இந்தியாவிலேயே `தமிழ்நாடு மாடல்’தான் சிறந்த மாடலா?”

தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன்

“உண்மையில் அது பெருமைப்படக்கூடிய விஷயம்தான். மதிய உணவுத்திட்டம் உள்பட பல திட்டங்கள் தமிழகத்திலிருந்து வந்தவைதான். தற்போது அந்தத் திட்டம் இந்தியா முழுவதும் பரவியுள்ளது. இந்த விஷயத்தில் தமிழகம் முன்னோடி என்பது உண்மையே. இதேபோல மற்ற மாநிலங்களும் சில விஷயங்களில் முன்மாதிரியாக இருக்கின்றன. உதாரணமாக, பால் உற்பத்தியை எடுத்துக்கொண்டால் அதில் குஜராத் சிறந்து விளங்குகிறது. பல மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் இருக்கிறது. அதேபோல தகவல் தொழில்நுட்பத்துறையை எடுத்துக்கொண்டால், அதன் வளர்ச்சி முதலில் கர்நாடகாவில்தான் தொடங்கியது; பின்னரே பிற மாநிலங்களுக்குப் பரவியது. தமிழ்நாடு பல விஷயங்களில் முன்மாதிரியாக இருப்பது உண்மையில் பெருமைக்குரிய விஷயம்தான். ஆனால், அதேபோல பிற மாநிலங்களும், வெவ்வேறு துறைகளில் தங்கள் சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றன என்பதையும் நாம் பார்க்கவேண்டும். உதாரணமாக, தகவல் உரிமைச் சட்டத்தை எடுத்துக்கொண்டால் அது முதன்முதலில் ராஜஸ்தானிலிருந்துதான் தொடங்கியது. எனவே, இதை இந்திய கூட்டாட்சியின் வெற்றியாக நினைத்துதான் பெருமையாகக் கருதமுடியும். மாறாக தனித்த ஒரு அரசின் / மாநிலத்தின் வெற்றியாக (Unitary Success) இதைக் கருத முடியாது.”

“கூட்டாட்சி முறை பற்றி குறிப்பிடுகிறீர்கள்; ஆனால், சில முறை மத்திய அரசு பெரியண்ணன் மனோபாவத்தில் நடந்துகொள்கிறதோ என்றே தோன்றுகிறது. அது நீங்கள் சொல்லும் கூட்டாட்சி மனப்பான்மையிலிருந்து லேசாக விலகுவதைப் போல தோற்றத்தை ஏற்படுத்துகிறதே? இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது அதில் ஒன்று. இந்த கூட்டாட்சி விஷயத்தில் மத்திய அரசின் அணுகுமுறை எப்படி இருக்கும்? கூட்டாட்சி மனப்பான்மையை தொடருமா அல்லது மாற்றங்கள் இருக்குமா?”

தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் மற்றும் விகடன் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன்

“பத்திரிகைச் செய்திகளின் தலைப்புகளைத் தாண்டி பார்த்தால், இந்த விவகாரத்தில் உண்மை புரியும். உதாரணமாக, மாநிலங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய எல்லா ஜி.எஸ்.டி தொகைகளையும், நிலுவைத் தொகைகள் அனைத்தையும் மத்திய அரசு செலுத்திவிட்டது. இந்தாண்டு பட்ஜெட்டில்கூட, மாநில அரசு மூலதனச் செலவினங்களை மேற்கொள்ள 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சி கட்டமைப்பின் மாண்பை மத்திய அரசு தொடர்ந்து மதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இதை வார்த்தைகளில் இன்றி, செயலிலும் காட்டுகிறது மத்திய அரசு.”

“பிரதமர் மோடி 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் பற்றி பேசி வருகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் பற்றி பேசி வருகிறார். தற்போது உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் பற்றி பேசி வருகிறார். இந்த எண்களையெல்லாம் கேட்கும்போது கர்வமாகவும், மலைப்பாகவும் இருக்கிறது. ஆனால், இவையெல்லாம் சாத்தியமா? இவற்றை சாத்தியப்படுத்த என்னென்ன தடைகள் இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?”

MK Stalin

“முதலில் இப்படி இலக்குகள் நிர்ணயிக்கப்படுவதை வரவேற்க வேண்டும். காரணம், நாம் எப்படி செயல்படவேண்டுமென்ற என்ற தெளிவான சிந்தனையை இவை வழங்குகின்றன. அதேசமயம், இந்த இலக்குகளை நம்மால் அடைய முடியுமா, முடியாதா என்பதைப் பல்வேறு காரணிகளே தீர்மானிக்கின்றன. உதாரணம், கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் போன்றவை. எனவே, இந்த இலக்குகளை நாம் அடைகிறோமா இல்லையா என்பதை மட்டுமே வைத்து, நம் வெற்றி தோல்விகளை அளவிடக்கூடாது. மாறாக, அந்த இலக்குகளை அடைய நாம் என்னென்ன முயற்சிகளை எடுத்தோம் என்பதை வைத்தே நம் வெற்றியை அளவிட வேண்டும். இந்த இலக்கை அடைய ஓர் அரசாங்கத்தால் என்னவெல்லாம் செய்யமுடியும்? சாலைகள், விமான நிலையங்கள், மெட்ரோ உள்ளிட்ட நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அதில் ஒன்று. இந்த வளர்ச்சியை நம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். நாடு முழுக்க இந்த வசதிகள் அதிகரித்து வருகின்றன. இதேபோல, டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்பட்டு வருகின்றன. இதைத் தாண்டி செய்யவேண்டிய முக்கியமான விஷயங்கள் என நான் இரண்டைக் குறிப்பிடுவேன். ஒன்று, உயர்கல்வி.

நாம் இரண்டு ஆண்டுகளை கொரோனாவால் இழந்துவிட்டோம். இந்த இழப்பை நாம் சரிசெய்யவேண்டும். அடுத்தது, மக்களின் உடல்நலன். அண்மையில் வெளியான தேசிய குடும்பநல சர்வே 5-யின்படி, நாட்டில் 40% பேரின் BMI (Body Mass Index) 25-க்கும் மேல் இருக்கிறது. இது அவர்கள் எதிர்காலத்தில் வெவ்வேறு உடல்நல பாதிப்புகள் மற்றும் தொற்றுகளுக்கு ஆளாகும் ஆபத்தையும் உருவாக்குகிறது. இதை சரிசெய்யவேண்டும். குறிப்பாக உணவு விஷயத்தில் நாம் கவனம் செலுத்தவேண்டும். இதையெல்லாம் தாண்டி, இன்னொரு விஷயத்தையும் சொல்லலாம். நாம் அனைவரும் LIC-யின் 5% பங்கு விலக்கல் (Disinvestment) பற்றி பேசி வருகிறோம். இதேபோல இன்னொரு LIC-யிலும் Disinvestment நடக்கவேண்டும். இதை மத்திய அரசு மட்டும் செய்யமுடியாது. மாநிலங்களும் செய்யவேண்டும். நான் இங்கு குறிப்பிடும் LIC என்பது License, Inspection, Compliance. இந்த LIC ராஜ் முடிவுக்கு வரவேண்டும். சிறிய தொழில்நிறுவனங்கள் பெருமளவில் தங்கள் நேரத்தை செலவிடுவது சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பதை உறுதிசெய்யும் அலுவல் பணிகளுக்குத்தான். இது மாறவேண்டும். இந்த மாற்றத்தை அரசும், தொழில்துறையினரும் இணைந்து நிகழ்த்தவேண்டும்.”

“சுலபமாக வணிகம் செய்வது (Ease of Doing Business) பற்றி தற்போது அரசாங்கங்கள் அதிகளவில் பேச ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க அம்சம்தான். சரி, இப்போது கொஞ்சம் உலக பொருளாதாரம் பற்றியும் பார்ப்போம். தற்போதைய கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலக கார்பரேட் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்துமே `China Plus One’ அவுட்சோர்சிங் பாலிசியை முன்னெடுத்திருக்கின்றன. இந்த `China Plus One’ பாலிசியில் இந்தியா மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. சீனாவிலிருந்து நிறைய வாய்ப்புகளை நாம் பெறுவோம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தில் நாம் இப்போது எங்கு இருக்கிறோம். நமக்கு இருக்கும் சவால்கள் என்ன?”

India China (Representational Image)

“மிக நல்ல கேள்வி. ஆனால், இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை நாம் உடனடியாக அவுட்புட்டை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், `China Plus One’ பாலிசியில் முக்கிய அம்சமாக, பல நாடுகளும் முதலில் உற்பத்தியை, தங்கள் சொந்த நாடுகளுக்கே எடுத்துப்போக முடியுமா என்றுதான் பார்க்கின்றன. உதாரணமாக, செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் இன்டெல் நிறுவனம், அதன் பல புதிய கிளைகளை தன் நாட்டிலேயேதான் திறந்துவருகிறது. காரணம், நாளையே தைவானுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில், அது தன்னை பாதிக்கும் என உணர்ந்திருக்கிறது. எனவே சொந்த நாட்டிற்கு செல்வதுதான் நிறுவனங்களின் முதல் இலக்காக இருக்கிறது. அதன்பின்பே வேறுநாடுகளைப் பற்றி யோசிக்கின்றன. அப்படி யோசிக்கும்போது அந்த வாய்ப்புகளை இந்தியா தவறவிடக்கூடாது என்பதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. Production Linked Incentive (PLI) Scheme அதற்கு ஓர் உதாரணம். இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் இருவருக்கும் சமவாய்ப்பை வழங்குகிறது. படிப்படியாக விரிவுபடுத்தப்படும் இந்த திட்டம் தற்போது 14 வெவ்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த `China Plus One’ விவகாரத்தில் இப்போதைக்கு சில நல்ல விஷயங்களை செய்தியளவில் மட்டும் கேள்விப்படுகிறேன். உதாரணமாக, சில ஃபார்மா நிறுவனங்கள் மற்றும் ஜப்பானின் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆகியவை இந்தியாவுக்கு வர தீவிரமாக யோசித்துவருவதாகச் சொல்கிறார்கள். இவையெல்லாம் மகிழ்ச்சியளிக்கக்கூடியவையே. ஆனால், உண்மையிலேயே இந்தியா `China Plus One’ விவகாரத்தில் வெற்றியடைந்துவிட்டதா என்பதைக் காண நாம் இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்.

“இந்த பதில் நம்பிக்கையளிக்கும் விதமாக இருக்கிறது. இந்திய பொருளாதாரம், உலக பொருளாதாரம் பற்றியெல்லாம் பேசிவிட்டோம். நாணயம் விகடன் ஒரு பெர்சனல் ஃபைனான்ஸ் (தனிநபர் நிதிமேலாண்மை) நாளிதழ். எனவே அது தொடர்பாக ஒரு கடைசி கேள்வி. ஒரு தனிநபர், முதலீட்டாளராக இப்போது என்ன செய்யவேண்டும்? நல்ல வருமானம் பார்க்க பாண்டுகளில் முதலீடு செய்வதா, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதா, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதா, அல்லது புதிதாக வந்திருக்கும் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்வதா என தனிநபர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். இது தொடர்பாக எங்களுடைய வாசகர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?”

Bitcoin (Representational Image)

“பணவீக்கத்தைத் தாண்டி, தற்போதைய வங்கி சேமிப்பு வட்டி விகிதங்கள் வருமானம் தருவதில்லை என்பது உண்மைதான். எனவே, இதற்கடுத்து சிறு சேமிப்பு திட்டங்களைப் பரிசீலிக்கலாம். அதற்கு அடுத்து முக்கியமானவை அரசு பத்திரங்கள் (Government Security Bonds). தற்போது, தனிநபர்களும் இந்த பத்திரங்களில் முதலீடு செய்ய அரசு அனுமதித்துள்ளது. பலருக்கும் இதில் முதலீடு செய்ய தயக்கம் இருக்கிறதுதான். ஆனால், இது மிக பாதுகாப்பான முதலீடு என்பதை மறந்துவிடக்கூடாது. இன்றைக்கு நீங்கள் அரசு பத்திரங்களில் முதலீடு செய்தால் 6.7 – 6.8% வரை வருமானம் கிடைக்கும். இது வங்கி சேமிப்பு மூலம் கிடைக்கும் வருமானத்தை விட அதிகம்தான். இதுதவிர, ஒரு முதலீட்டு ஆலோசகராக நான் எப்போதும் அளிக்கும் ஆலோசனை ஒன்று உண்டு. அது, இப்போதைக்கு இருப்பது போன்ற அசாதாரணமாக சூழ்நிலையில் ஓரளவு பணத்தை வெறுமனே கரன்சியாகவே வைத்திருப்பது. அது, எந்தவிதமான வருமானத்தையும் அளிக்காவிட்டாலும்கூட, உங்கள் பாதுகாப்புக்கு இது மிக முக்கியமான ஒன்று என்பேன். நீங்கள் கடைசியாக கிரிப்டோ பற்றி கேட்டிருந்தீர்கள். நிச்சயம், அவற்றிற்கு நான் ரசிகன் இல்லை. அதில், நீங்கள் முதலீடு செய்து லாபமடைந்தால், அது வெறும் அதிர்ஷ்டம்தான். அதை திறமையென்றும் சொல்லமுடியாது. ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை, நாட்டில் அதிகளவில் வேலைவாய்ப்பை அளிக்கும் ஒரு துறை அது. விரைவில், அது மீண்டுவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.