புதுடெல்லி:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் அங்குள்ள இந்திய மாணவர்களை ‘ஆபரேசன் கங்கா’ திட்டத்தின்கீழ் மத்திய அரசு மீட்டு வருகிறது.
உக்ரைனில் வான் எல்லை மூடப்பட்டதால் பக்கத்து நாடுகளான போலந்து, ஹங்கேரி, சுலோ வாக்கியா ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து பயணிகள் விமானம், விமானப்படை மூலம் மீட்கப்பட்டனர்.
2-வது கட்டமாக உக்ரைனில் இருந்து ரஷிய நகரங்கள் வழியாக இந்தியர்கள் மீட்கப்படுகிறார்கள்.
உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கல்வியை தொடர்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். தங்கள் படிப்பை இந்தியாவிலேயே தொடர்வது குறித்து மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உக்ரைனில் இருந்து 22,500 இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
மத்திய அரசின் இந்த பதிலை தொடர்ந்து உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்களை மீட்க கோரிய வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது.