புதுடெல்லி: ‘உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் அங்குள்ள இந்திய மாணவர்களை பயணிகள் விமானம், விமானப்படை மூலம் ஒன்றிய அரசு மீட்டது.இதற்கிடையே, உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் கல்வியை தொடர்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா அடங்கிய அமர்வு, ‘உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்டதோடு அவர்களது எதிர்கால படிப்பு குறித்தும் ஆராய்ந்து வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மாணவர்கள் அனைவரும் திரும்பி வந்துவிட்டதால், இந்த வழக்கில் இனி எதுவும் இல்லை. எனவே வழக்கை முடித்து வைக்கிறோம்’ என உத்தரவிட்டது. இதற்கிடையே, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த விமானப்போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங், கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் மார்ச் 11ம் தேதி வரை உக்ரைனில் இருந்து 22,500 இந்தியர்கள் மீட்கப்பட்டதாக கூறி உள்ளார்.