பெங்களூரு: உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் பலியான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பாவின் உடல் நேற்று பெங்களூரு கொண்டுவரப்பட்டது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இந்த போரின் போது ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில், உணவு வாங்கி வர சென்ற கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டம், ரானிபென்னூர் தாலுகா, செலகெரே கிராமத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா பலியாயானார். ஒன்றிய அரசு மேற்கொண்ட முயற்சியால் அவரது உடல் உக்ரைனிலிருந்து கர்நாடகா கொண்டு வரப்பட்டது. கர்நாடகா வந்தடைந்த நவீன் உடலுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உள்பட அரசியல் தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது சொந்த ஊரான ஹாவேரி மாவட்டம் செலகெரே கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. இதில் முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் தலைவர்கள், மடாதிபதிகள் பங்கேற்றனர். இதையடுத்து சாமனூர் சிவசங்கரப்பா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திடம் பெற்றோரின் விருப்பப்படி மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கப்பட்டது.