நேட்டோ அமைப்பில் சேருவதைக் கருத்தில் கொண்டு செயல்படும் ஐரோப்பிய ஒன்றிய அண்டை நாடுகளுக்கும், ஏற்கனவே கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற நாடுகளுக்கும் ரஷ்ய தூதுவர் ஒருவர் கடும் அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் இணையும் உக்ரைனின் திட்டத்தை தகர்க்கவே ரஷ்யா உக்ரைன் மீது தற்போது கொடூர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவுக்கான ரஷ்ய தூதர் Igor Kalabukhov உள்ளூர் செய்தி ஊடகம் ஒன்றில் தெரிவிக்கையில்,
நேட்டோ அமைப்பு தொடர்பில் ரஷ்யாவுக்கு சில திட்டங்கள் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போஸ்னியா நேட்டோவில் உறுப்பு நாடாக இணைந்துவிட்டது என வைத்துக் கொள்வோம், ரஷ்யாவை இலக்காகக் கொண்ட அணு ஏவுகணைகளை அங்கு வைக்க பிரஸ்ஸல்ஸ் முடிவு செய்தது என்றால், ரஷ்யா கண்டிப்பாக நடவடிக்கை முன்னெடுக்கும் என்றார்.
மட்டுமின்றி, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா நாடுகள் எந்த ஒரு அமைப்பில் இணைவதாக முடிவெடுத்தாலும், அது அவர்களின் உள்நாட்டு விவகாரம். ஆனால் எங்கள் எதிர்வினை அது வேறு விவகாரம் எனவும் Igor Kalabukhov குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் நாங்கள் என்ன எதிர்பார்த்தோமோ அதையே அவர்களுக்கு உணர்த்தினோம். ரஷ்யாவுக்கு ஒரு அச்சுறுத்தல் என்றால், கண்டிப்பாக எதிர்வினை இருக்கும் என்றார் அவர்.
மேலும், உக்ரைன் மட்டுமின்றி, தற்போது ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் குரோஷியா, ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகளுக்கும் ரஷ்யாவின் எதிர்வினை காத்திருக்கிறது என்றார் Igor Kalabukhov.
உக்ரைன் ஊடுருவலை அடுத்து, ரஷ்யாவின் திட்டம் இதுதான் என Igor Kalabukhov சூசகமாக தெரிவித்துள்ளார் என்றே செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர், இது ஒரு பெரிய மோதலுக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தில் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்குள் துருப்புக்களை அனுப்ப மறுத்து வருகிறது.
உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகள் களமிறங்கினால், விளாடிமிர் புடின் கண்டிப்பாக அணு ஆயுதத்தை பயன்படுத்துவார் என்ற அச்சமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே, உக்ரைன் மீது விமானங்கள் பறக்க தடை மண்டலத்தை விதிக்குமாறு நேட்டோவிடம் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டது உறுப்பு நாடுகளால் நிராகரிக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போர் முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1949ல் நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது.
அதன் 12 நிறுவன உறுப்பினர்கள் பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா.
இதற்கு பதிலடியாக 1955ல் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகளின் சொந்தக் குழுவை ரஷ்யா உருவாக்கியது, இது வார்சா ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.
1991ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஹங்கேரி மற்றும் போலந்து போன்ற பல முன்னாள் வார்சா ஒப்பந்த நாடுகள் தங்கள் முடிவுகளை மாற்றிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.