வார்சா: ரஷ்ய படையெடுப்பால் வீடு, உடைமைகளை இழந்து உயிர் பிழைத்தால் மட்டும் போதுமென்று தனது நாட்டிற்கு தஞ்சம் கோரி வரும் உக்ரைன் அகதிகளை எல்லையில் ‘புதின் டார்ட் போர்டு’ வைத்து வரவேற்கிறது அண்டை நாடான போலந்து.
ரஷ்யாவின் படையெடுப்பால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இதுவரை 1 கோடி பேர் வெளியேறியுள்ளனர். சுமார் 4.5 கோடி மக்கள் தொகை கொண்ட உக்ரைனிலிருந்து கால்வாசி மக்கள் வெளியேறிவிட்டனர் எனக் கூறுகிறது அகதிகளுக்கான ஐ.நா ஆணையம். உக்ரைனிலிருந்து வெளியேறிய பலரும் அண்டை நாடான போலந்துக்கு தான் செல்கின்றனர்.
இந்நிலையில், போலந்து தலைநகரான வார்சாவின் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதின் உருவ பொம்மையை டார்ட் போர்டு போல் தொங்கவிட்டுள்ளனர். அங்கு வந்திறங்கும் உக்ரைன் மக்கள் கூர்மையான சிறிய அம்பை வீசி புதினின் உருவ பொம்மையை துளைக்கலாம். சொந்த நாட்டை விட்டு வெளியேறி வரும் மக்களுக்கு இந்த வரவேற்பு மன இறுக்கத்திலிருந்து வெளிவர உதவும் எனக் கூறுகின்றனர், இதற்கு ஏற்பாடு செய்த போலந்து அதிகாரிகள்.
உங்களை தனியாக விடமாட்டோம்… – முன்னதாக போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் தலைநகர் கீவுக்கு நேற்று போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா நாட்டுப் பிரதமர்கள் சென்றனர். அவர்கள் ரயிலில் நீண்ட பயணம் மேற்கொண்டு கீவ் நகரை அடைந்தனர். போலந்து பிரதமர் மடேஸ் மொராவியேகி, “உக்ரைன் நிச்சயம் தனித்து விடப்படாது. ஏனெனில் நீங்கள் உங்களுக்காக மட்டும் போராடவில்லை. உங்கள் சுதந்திரம், பாதுகாப்பு தாண்டி அண்டை நாடுகளின் பாதுகாப்புக்காகவும் போராடுகிறீர்கள்” என்று பாராட்டியிருந்தார்.
வரவேற்கும் வார்சா… – போலந்துக்கு வரும் உக்ரேனியர்களில் பலரும் தலைநகர் வார்சாவிலேயே தங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 2 லட்சம் உக்ரேனியர்கள் அங்கு தங்கியுள்ளனர். இதனால் வார்சாவின் மக்கள் தொகை திடீரென 16% அதிகரித்துள்ளது. உலகளவில் அகதிகளை வரவேற்பதில் துருக்கி, கொலம்பியா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக போலந்து 4-வது இடத்தில் இப்போது உள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை போலந்து அதிபரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திக்க வருகிறார். உக்ரைன் போர் குறித்து இந்த சந்திப்பின்போது இரு நாட்டுத் தலைவர்களும் கலந்தாலோசிக்க உள்ளனர்.