உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, ஆளும்
பாஜக
47 சட்டப்பேரவைத் தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது. எனினும், பாஜக முதலமைச்சர் வேட்பாளரான புஷ்கர் சிங் தாமி, தான் போட்டியிட்ட கட்டிமா தொகுதியில் தோல்வி அடைந்தார். தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருந்தாலும் முதலமைச்சர் வேட்பாளர் புஷ்கர் சிங் தாமி தோல்வி அடைந்தது அக்கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தியது.
இதை அடுத்து உத்தரகாண்ட் முதலமைச்சராக யாரைத் தேர்வு செய்வது குறித்து கடந்த ஒரு வாரமாக பாஜக தலைவர்கள் ஆலோசனை செய்து வந்தனர். முதலமைச்சர் பதவிக்கு, புஷ்கர் சிங் தாமி, முன்னாள் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில் இன்று, உத்தரகாண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக மீண்டும் புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் அவர் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவி ஏற்க உள்ளார். இதை அடுத்து பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட கடிதத்தை எடுத்துக் கொண்டு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க புஷ்கர் சிங் தாமி உரிமை கோர உள்ளார்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, சட்டப்பேரவை உறுப்பினர் அல்லாத ஒருவர், முதலமைச்சராக பதவி ஏற்கும் பட்சத்தில், ஆறு மாதங்களுக்குள் ஏதாவது ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.