இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு வழங்கப்படுகின்றன. கலை, சமூகப் பணி, அறிவியல், பொறியியல், வணிகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ், போன்ற பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களைக் கௌரவிக்க இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளன.
இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை வழங்கினார். முன்னதாக, இந்தாண்டு மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை அவர் மகளிடம் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், ஷெனாய் இசைக் கலைஞர் பீலேஷ் பஜாந்த்ரி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
அதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.