திருச்சி: ”உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்துவிட்ட நிலையில், பேருந்துக் கட்டணம், மின் கட்டணம், பால் விலை என பொதுமக்களுக்கு பரிசாக பல்வேறு விலை உயர்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அளிக்கவுள்ளார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
நீதிமன்ற உத்தரவின்படி திருச்சியில் தங்கி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கையெழுத்திட்டு வருகிறார். இதன்படி, கடந்த வாரம் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் கையெழுத்திட்ட டி.ஜெயக்குமார், இன்று 4-வது முறையாக கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், என்.ஆர்.சிவபதி, முன்னாள் எம்எல்ஏ ராம.ராமநாதன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் டி.ஜெயக்குமார் கூறியது: ”மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது ஆட்சிக் காலத்தில் ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. குறிப்பாக, விவசாயிகளுக்கென ஒருங்கிணைந்த திட்டத்தை முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா செயல்படுத்தினார்.
ஆனால், திமுக அரசு தற்போது தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கென எந்த பிரத்யேக திட்டமும் இல்லை. மீன் வளம், பால் வளம், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளின் நிதியையும், வேளாண் பட்ஜெட்டில் சேர்த்து விவசாயிகளை ஏமாற்றும் வேலையைச் செய்துள்ளனர். இந்த வேளாண் பட்ஜெட், விவசாயிகளுக்கு ஒட்டுமொத்தமான ஏமாற்றம்தான்.மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருந்தார்.
ஓர் அரசு, அடித்தட்டு மக்களின் கஷ்டத்தைப் புரிந்து திட்டங்களைத் தீட்ட வேண்டும். ஆனால், எதற்கெடுத்தாலும் சமூக நீதி என்று பேசும் இந்த திமுக அரசு, தாலிக்குத் தங்கம், திருமண நிதியுதவி ஆகிய திட்டங்களை நிறுத்திவிட்டது. ஏற்கெனவே 2.14 கோடி இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு அதையும் வழங்காமல், தற்போது அரசுப் பள்ளியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதாக அறிவித்துள்ளனர். திமுக அரசின் ஏமாற்று வேலையை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். தகுந்த பாடத்தை தேர்தல் களத்தில் அளிப்பார்கள்.
உள்ளாட்சித் தேர்தல் முடிந்துள்ள நிலையில் பேருந்துக் கட்டணம், மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி என பொதுமக்களுக்கு பரிசாக பல்வேறு விலை உயர்வுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அளிக்கவுள்ளார்” என்றார்.