சென்னை பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் யார் கெத்து என்பதை முடிவு செய்வதில் ஆரம்பித்து ஏற்படும் சிறிய சண்டைகள் கொலையில் முடிவதால் அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த 14ம் தேதி கோவிலம்பாக்கத்தில் பிளைவுட் கடையில் வேலை பார்த்து வந்த நன்மங்கலத்தை சேர்ந்த விஷ்ணு என்ற இளைஞர் 5 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டார். இருந்தபோதும் உயிருக்கு ஆபத்தில்லாமல் தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை முயற்சிக்கான காரணம் கோவிலம்பாக்கம், மற்றும் நன்மங்கலத்தில் யார் கெத்து என்ற பிரச்சனையில் நடந்தது. இதில் மணிமாறன், சந்தோஷ், சக்திவேல், சோலையப்பன், ஒரு சிறார் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதே போல் கடந்த 19ம் தேதி மேடவாக்கம் கூட்ரோடு அருகே நந்தகுமார் என்ற இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு காரணம் மேடவாக்கத்தை சேர்ந்த அஜித் மற்றும் சிவா இருவருக்குமிடையே யார் பெரியவன் என்பதில் ஏற்பட்ட தகராறு என கூறப்படுகிறது. சிவாவின் நண்பர்களை மிரட்டி சிவாவை வரவழைக்குமாறு கூறியுள்ளார் அஜித். ஆனால் வந்தால் உன்னை கொலை செய்து விடுவார்கள் என அஜித்தை எச்சரித்துள்ளார் நந்தகுமார். இதையடுத்து சிவா தன் நண்பர்களுடன் இணைந்து நந்தகுமாரை அடித்து கொலை செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்போது வரை அஜித்குமார்(24), மணிகண்டன்(21), மகேஷ்(20), ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், நேற்றிரவு பள்ளிகரணை ஜல்லடியான் பேட்டை பகுதியில் நரேஷ் என்ற இளைஞரை இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டனர். உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு கொலைகள், ஒரு கொலை முயற்சி என அடுத்தடுத்து குற்றச்சம்பவங்கள் நடந்து வருவதால் பள்ளிக்கரணை பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். காவல்துறையினர் அப்பகுதியில் கொலை, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய நபர்களை கண்காணித்து வந்தால் மட்டுமே இந்த குற்றங்கள் நடைபெறுவது குறையும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
பள்ளிகரணை நரேஷ் கொலை வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் அருண்பாண்டியன், திலீப், சஞ்சய், அருண் ஆகிய நான்கு பேர் சரணடைந்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM