கீவ்: ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு ஆயுத சப்ளை செய்யவேண்டாம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் நாட்டில் கடந்த 25 நாட்களாக போர்ப் பதற்றம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் ரஷ்ய படைகள் ஹைபர்சானிக் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றன.
உலக அளவில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவின் இந்த செயலை கண்டித்து பொருளாதார தடை விதித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்தாவிட்டால் தொடர்ந்து போராடுவோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போராடி வருகிறார். தற்போது ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாமீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட ஓர் வீடியோ உரையில் ரஷ்யா போர் புரிவதற்கு உலகில் எந்த நாடுகளும் ஆயுத சப்ளை செய்ய வேண்டாம் என்று தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எரிபொருள் உதவி செய்ய வேண்டாமென்றும் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஐரோப்பிய நாடுகளில் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான ஜெர்மனிக்கு அவர் தனது உரையின் போது நேரடியாக கோரிக்கை வைத்தார்.
ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இன்று ஒரு முக்கிய கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷ்யாவுக்கு மேலும் பல பொருளாதார தடை விதிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய யூனியனின் இந்த செயல்பாடு பல நாடுகளை பாதிக்கும் என்று ரஷ்யா முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement