1990-களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த உண்மை சம்பவத்தை தழுவிய கதையம்சம் கொண்ட திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்த திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பாக்ஸ் ஆஃபிஸில் தரமான வசூலை ஈட்டி வருகிறது இத்திரைப்படம். இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை பிரதமர் மோடி உட்பட பல்வேறு பிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அமீர் கான் இந்த படத்தை அவசியம் அனைத்து இந்தியர்களும் தவறாமல் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
“நான் நிச்சயம் இந்த படத்தை பார்ப்பேன். இந்தக் கதை நமது வரலாற்றை பேசியுள்ள திரைப்படமாகும். காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நடந்தது மிகவும் வருந்தத்தக்கது. இது மாதிரியான தலைப்புகளில் வெளி வருகின்ற படத்தை ஒவ்வொரு இந்தியரும் அவசியம் பார்க்க வேண்டும்.
மனிதத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவரின் மனதையும் மிகவும் ஆழமாக தொட்டுள்ளது இந்த திரைப்படம். அதனால் நான் நிச்சயம் பார்ப்பேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வரும் 25-ஆம் தேதியன்று திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கான புரொமோ நிகழ்வில் கலந்து கொண்ட அமீர் கானிடம் தி காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.