ஆஸ்திரேலியாவில் இருந்து இரண்டு ஞானசம்பந்தர் சிலைகள் உட்பட 29 சிலைகள் மீட்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு இவை அனுப்பப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சீர்காழி அருகே, சோழர் கால கோயிலில் இருந்து கடத்தப்பட்ட குழந்தைப்பருவ ஞானசம்பந்தர் சிலையும், நடனமாடும் ஞானசம்பந்தர் சிலையும் ஆஸ்திரேலியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் இருந்தன. பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்தி 9-10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 29 சுவாமி சிலைகள் மற்றும் ஓவியங்கள் மீட்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றில், ஞானசம்பந்தரின் சிலைகளும் அடக்கம்.
இந்தியா-ஆஸ்திரேலியா இருதரப்பு உச்சி மாநாட்டையொட்டி, இந்த சிலைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. சிலைகள், ஓவியங்கள், அலங்காரப்பொருட்கள் என பிரிக்கப்பட்ட இவற்றை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார். மேலும், 29 பழங்காலப் பொருட்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியதற்கு ஆஸ்திரேலிய பிரதமருக்கு மோடி நன்றி தெரிவித்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மட்டும் வெளிநாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்
இந்த சிலைகள் மற்றும் ஓவியங்கள் அனைத்தும் சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய சுபாஷ் கபூர் மூலம் ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இவை அனைத்தும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு விரைவில் அனுப்பப்படும் என்று மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM