கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 ஓகே… ஆனால், தாலிக்குத் தங்கம் திட்டம் ரத்து சரியா?!

பட்ஜெட்டில் அறிவிப்பு:

தமிழக சட்டப்பேரவையில் 2022-23-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததற்குப் பின்பு தாக்கல் செய்யப்படும் முதல் முழு பட்ஜெட் என்பதினால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதில், அரசுப் பள்ளிகளில் 6-12-ம் வகுப்பு வரை கல்வி கற்ற மாணவிகளில், உயர் கல்வியில் சேர்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, `மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’, `மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்’ என்று மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்

இந்த திட்டத்தின் மூலம் மாணவிகள் உயர்கல்வி இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் கல்லூரியில் சேர்ந்து அவர்களின் கல்வி காலம் முடியும் வரை அவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு என்று இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை அரசு மாதம் 1,000 ரூபாய் வழங்கும். ஏற்கனவே அந்த மாணவிகள் மற்ற கல்வி உதவித்தொகை பெற்றுவந்தாலும், இந்த உதவித்தொகையும் வழங்கப்படும். இந்த திட்டம் மூலம் ஆண்டுக்கு ஆறு லட்சம் மாணவிகள் பயனடைய வாய்ப்புள்ளது. மேலும், இந்த திட்டத்துக்காக 698 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

திருமண நிதித்திட்டம்:

தமிழகத்தில் பெண்கள் திருமணத்துக்கு உதவிடும் வகையில், தமிழக அரசு பல்வேறு உதவித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் திருமணத்துக்கு நிதி உதவியுடன் தாலிக்குத் தங்கமும் சேர்த்து வழங்கும் முதன்மையான திட்டம் தான் ‘மூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதித்திட்டம்’. இந்த திட்டம் மூலம் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, இரண்டு வகையான நிதி உதவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.

திருமண நிதித்திட்டம்

பத்தாவது வரை படித்த பெண்களுக்கு 25,000 ரூபாய் நிதியுதவியும், 8 கிராம் தங்க நாணயம் தாலி செய்வதற்கு வழங்கப்படும். பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 50,000 ரூபாய் நிதியுதவியும், 8 கிராம் தங்க நாணயம் தாலி செய்வதற்கு வழங்கப்படும். வழங்கப்படும் உதவித்தொகையானது பயனாளரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் பயனடைய மணப்பெண்ணுக்கு 18 வயது முடிவடைந்திருக்க வேண்டும். மணப்பெண்ணின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். தற்போது இந்த திருமண நிதியுதவித் திட்டம், உயர் கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்பட்டிருப்பதால், திருமணம் நிதி உதவியும் தாலிக்குத் தங்கமும் வழங்கப்படமாட்டாது என்று தெரியவருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேலிடம் பேசினோம். “திமுக அரசு புதிய திட்டம் எதுவும் கொண்டுவரத் தேவை கிடையாது. இருக்கும் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தினால் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லும். தற்போது இவர்கள் புதிய திட்டங்கள் எதையும் கொண்டு வராமல், முன்பிருக்கும் திட்டங்களை மாற்றி ஸ்டிக்கர் ஒட்டி அறிக்கை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். திமுக தேர்தல் அறிக்கை எப்படிப் பளபளப்பாக ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்தியதோ, அதே போல இப்போது இவர்கள் அறிவிப்பதும் வெற்று அறிக்கை மட்டும் தான்” என்று கூறினார்.

பாபு முருகவேல்

தொடர்ந்து பேசியவர், “இந்த அரசு குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு வழங்கும் அம்மா குழந்தை நலப் பரிசு பெட்டகத்தை நிறுத்தியுள்ளது. அம்மா வாகன திட்டத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தை நிறுத்தியுள்ளது. முன்பு வழங்கப்பட்டு வந்த சைக்கிள், லேப்டாப் என்று பல்வேறு திட்டங்களை நிறுத்தியுள்ளது. மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை நிறுத்திவிட்டு, புதிய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம் என்று கூறுவது தவறு.

திராவிட மாடல் என்று மக்களை ஏமாற்றி அவர்களின் சுயமரியாதையைத் தூண்டி அரசியல் செய்து வருகிறார்கள். நடைமுறைக்குச் சாத்தியமே இல்லாத திட்டங்களைக் கொண்டுவருவது ஏமாற்றும் வேலை. இந்த அரசு மக்களுக்குத் தேவையான எந்த திட்டங்களையும் கொண்டுவரவில்லை என்பது தான் உண்மை நிலவரம்” என்று பேசினார்.

இந்த சர்ச்சை தொடர்பாக திமுகவின் செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். “அதிமுக அரசின் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியுள்ளோம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் அம்மா மினி கிளினிக் என்று ஒரு திட்டம் கொண்டுவந்திருந்தார்கள். அந்த கிளினிக் சுடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்தது. பெயருக்கு பல்வேறு திட்டங்களை அவர்கள் தொடங்கியிருந்தார்கள். அப்படி அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்துமே அவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தான். அப்படியான திட்டங்களை மட்டுமே நிறுத்தியுள்ளோம்” என்றார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

மேலும், “இன்றும் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களுக்குப் பயன்தரும் எந்த திட்டங்களையும் இந்த அரசு நிறுத்தவில்லை என்பது தான் உண்மை நிலவரம். நிதி உதவியும், தங்கமும் பெரியதா அல்லது கல்வி பெரியதா என்று என்னைக் கேட்டால் நான் கல்வி தான் பெரியது என்று கூறுவேன். பெண்களுக்குத் தங்கத்தை விட உயர்வான கல்வியைக் கிடைக்க வழிவகை செய்கிறது. கல்வியின் மூலம் அந்த பெண்ணுக்கு ஒரு வளமான எதிர்காலம் உருவாகும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. கல்வியின் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறும்” என்று தெரிவித்தார்.

தற்போது அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளில் வெறும் 46 சதவிகிதம் பேர் மட்டுமே உயர் கல்வி கற்கச் செல்கிறார்கள். இதற்கு முக்கிய கரணம் அந்த மாணவிகளின் ஏழ்மை நிலை தான். தாலிக்குத் தங்கம் திட்டத்தைப் பொறுத்தவரை ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் பயனடைந்து வருகிறார்கள். தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள திட்டத்தினால் ஆறு லட்சம் பேர் பயனடைவார்கள் என்று அரசு தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

இதனிடையே இன்று சட்டப்பேரவையில் இந்த விவகாரம் குறித்த விவாதத்தின் போது விளக்கம் அளித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், “பெண்களுக்கு கல்விதான் நிரந்தர சொத்து. அதனால் தான் திருமண உதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருமணம் என்ற தகுதிக்கு முன் கல்வி என்ற நிரந்தர சொத்து வேண்டும். சமூக நீதி, பெண் கல்வி, வெளிப்படைத்தன்மை அடிப்படையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருமண உதவித் தொகையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தனர். தற்போது இந்தத் திட்டம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு 6 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. இதில் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.