காங்கிரஸ் தேர்தல் குழுவை புதிதாக நியமிக்க வேண்டும்- அதிருப்தி தலைவர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் 23 பேர் (ஜி-23) கடந்த 2020-ல் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்கள்.

சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து அவர்களின் கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றது. கடந்த வாரம் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலும் அதிருப்தி தலைவர்களின் கோரிக்கை மீண்டும் எதிரொலித்தது.

அதைத்தொடர்ந்து குலாம் நபி ஆசாத் வீட்டில் ஜி-23 தலைவர்கள் 2 முறை கூடி ஆலோசனை நடத்தினர். காந்தி குடும்பத்தில் உள்ளவர்கள் கட்சி பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று அதிருப்தி தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

இதை தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் மேலிடம் ஈடுபட்டது. அதன் படி குலாம்நபி ஆசாத்துக்கு மீண்டும் மேல்-சபை பதவியும், பூபிந்தர் சிங் ஹீடாவுக்கு அரியானா மாநில தலைவர் பொறுப்பும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் தேர்தல் குழுவை புதிதாக நியமிக்க வேண்டும் என்று அதிருப்தி தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

சோனியா காந்தி குடும்பத்தை சேர்ந்த ஒருவரையோ அல்லது கட்சி தலைவராக தங்கள் வேட்பாளரையோ தேர்ந்தெடுப்பதற்காக கட்சி தலைமையால் இயக்கப்பட்ட அமைப்பு ரீதியான தேர்தல் செயல்முறை மோசடியானது.

இந்த அமைப்பு முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் குடும்ப விசுவாசிகளின் பிரத்தியேக சிறப்பாகவும் இருப்பார்கள்.

காங்கிரஸ் கட்சியுடன் மத்திய தேர்தல் குழுவின் தலைவராக மதுசூதனன் மிஸ்திரி உள்ளார். இவர் காந்தி குடும்பத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் தனது பொறுப்பின் கீழ் மாநிலங்களில் தேர்தல் நடத்தும் பிரதேச தேர்தல் அதிகாரிகளை (பி.ஆர்.ஓ) நியமித்துள்ளார்.

இந்த ஒவ்வொரு மாநில பி.ஆர்.ஓ.க்களுக்கும் 2 உதவி பிரதேச தேர்தல் அதிகாரிகள் (ஏ.பி.ஆர்.ஓ.க்கள்) உதவுவார்கள்.

இந்த பிரதிநிதிகள் மற்றும் அகில இந்திய உறுப்பினர்களாக குடும்ப விசுவாசிகள் மட்டுமே தேர்ந்தெடுப்பார்கள். இதனால் தற்போதுள்ள தேர்தல் குழுவை கலைத்து விட்டு புதிய தேர்தல் குழுவை நியமிக்க வேண்டும்.

சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் மட்டுமே காங்கிரசின் விருப்பத்தை பிரதிபலித்திடும். அத்தகைய தேர்தலை நடத்துவது கட்சியின் ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள கனநாயகத்தை கொண்டு வருவதற்கு பெரிதும் உதவும்.

தேர்தல் செயல்முறை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். அப்போது தான் கட்சிக்கு அனைவரையும் உள்ளடக்கிய தலைமை அமையும். இருதரப்புக்கும் இடையிலான சமரச பேச்சு வார்த்தையில் இது ஒரு முக்கிய அம்சமாகும்.

இவ்வாறு அதிருப்தி தலைவர்கள் தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சி சமீபத்தில் தேர்தல் குழுவை நியமித்தது. அதன் தலைவராக முன்னாள் எம்.பி.மது சூதனன் மிஸ்திரி உள்ளார். ராஜேஷ் மிஸ்ரா, ஜோதிமணி, அரவிந்தர் சிங் லவ்லி, கிருஷ்ண பைரே கவுடா ஆகிய 4 உறுப்பினர்கள் அந்த குழுவில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்… திருப்பதியில் இன்று வெளியிடப்பட்ட தரிசன டிக்கெட்டுகள் 1 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.