மேற்கு வங்காள மாநிலம் சீல்டா ரயில் நிலையத்தில் காணாமல் போன எல்லை பாதுகாப்பு வீரர் ரமேஷை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி சுதா தாக்கல் செய்த வழக்கில், மேற்கு வங்காள மாநில காவல்துறையிடம் தகவல் பெற்று தெரிவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த சுதா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “38 வயதான தன்னுடைய கணவர் ரமேஷ் எல்லை பாதுகாப்பு படையில்(BSF) ஜல்பைகுரி மாவட்டம், மேற்கு வங்காள மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் வருமானத்தைக் கொண்டுதான் குடும்பச்செலவு மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவை பார்த்து வருகின்றேன். எனது கணவர் 60 நாள் விடுப்பில் வீட்டிற்கு வந்தார். மீண்டும் 28.08.2021 ரயில் மூலமாக பணிக்கு செல்ல புறப்பட்டார். 30.08.2021 சீல்டா ரயில் நிலையத்தில் சென்று அடைந்ததாக என்னிடம் தெரிவித்தார். பின்னர், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.
என் கணவரின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது என்னுடைய கணவர் பணியில் சேரவில்லை என தெரிவித்தார். இதனால், திருநெல்வேலி பழுவூர் காவல் நிலைத்தில் பூகார் கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது கணவர் ரமேஷ்யை கண்டுபிடித்து தர உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு, “நமது நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரருக்கு நாம் பாதுகாப்பு வழங்க வேண்டும். மாநிலங்களில் காணாமல் போன பலரை காவல் துறையினர் கண்டுபிடித்து கொடுக்கின்றனர். ஏன் எல்லை பாதுகாப்பு படை வீரரை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது” என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, ஜல்பைகுரி மாவட்டம், மேற்கு வங்காள மாநில காவல்துறையிடம் தகவல் பெற்று மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM