காரைக்கால்: காரைக்கால் பொதுப்பணித் துறை அலுவலக வவுச்சர் ஊழியர்கள் ஊதியக் கோரிக்கையை வலியுறுத்தி இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் வவுச்சர் ஊழியர்களின் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு, முதல்வர் ரங்கசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரூ.10 ஆயிரமாக ஊதியத்தை உயர்த்தி அரசாணை பிறப்பித்தார்.
இந்நிலையில் புதுச்சேரி, ஏனாம் பிராந்தியங்களில் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், காரைக்கால் பிராந்திய பொதுப்பணித்துறையில் பணியாற்றும் வவுச்சர் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்து வவுச்சர் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், திருநள்ளாறு ஷா கார்டனில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் உள்ளிட்ட விடுபட்ட சுமார் 60 வவுச்சர் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் அறிவிக்கப்பட வேண்டும் என்று போராட்டத்தின்போது வலியுறுத்தினர்.
அரசு பணியாளர் நல கூட்டமைப்பு செயலாளர் பிரபு தலைமை வகித்தார். 100-க்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.