புதுடெல்லி:
கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை உள்பட 17 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனர் சைரஸ் பூனாவாலா உள்பட பலரும் பத்ம விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், 125 வயதான யோகா குரு சுவாமி சிவானந்தாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.
முன்னதாக, விழா அரங்கிற்கு வந்த சுவாமி சிவானந்தா அங்கிருந்த அனவைரையும் வணங்கினார். அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி அமர்ந்த இடத்துக்கு சென்ற சிவானந்தா அவரையும் தரையில் விழுந்து வணங்கினார். அவருக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி அவரை குனிந்து வணங்கினார்..
தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை தரையில் விழுந்து வணங்கினார் சுவாமி சிவானந்தா. இதைக் கண்டு பதறிப்போன ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவரை உடனடியாக எழுப்பி பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தார். இச்செயல் விழா அரங்கில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்…காங்கிரஸ் தேர்தல் குழுவை புதிதாக நியமிக்க வேண்டும்- அதிருப்தி தலைவர்கள் வலியுறுத்தல்