கீவ் வணிக வளாகத்தை இரவோடு இரவாக தகர்த்த ரஷிய படை- 8 பேர் உயிரிழப்பு

கீவ்:
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் 26வது நாளாக நீடிக்கிறது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி உள்ள ரஷியா, தலைநகர் கீவ் மற்றும் மரியுபோல் நகரங்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக துறைமுக நகரான மரியுபோலை சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. 
சூப்பர்சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பயங்கரமாக ஆயுதங்களுடன் தாக்குவதால் அந்நகரம் சீர்குலைந்துள்ளது. இதில் பொதுமக்கள் இறந்த வண்ணம் உள்ளனர். ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் கடுமையாக போரிட்டு வருகின்றனர்.
தலைநகர் கீவில் உள்ள வணிக வளாகம் மீது நேற்று இரவு ரஷிய படைகள் ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் நொறுங்கின. கீவில் இன்று முதல் புதன்கிழமை காலை வரை புதிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக மேயர் அறிவித்துள்ளார்.
உக்ரைன் ராணுவ வீரர்கள் மரியுபோல் நகரில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, சரணடைய வேண்டும், இல்லையெனில் பேரழிவை சந்திக்க நேரிடும் என ரஷியா எச்சரித்தது. ஆனால் சரண் அடையும் பேச்சுக்கே இடமில்லை என உக்ரைன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.