கும்பகோணம்: கும்பகோணம் பகுதியில் இன்று ஒரே நாளில் 7 கோயில்களில் சசிகலா தரிசனம் செய்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா சென்னையில் இருந்து கடந்த 17 -ம் தேதி, தஞ்சாவூர் வந்து பரிசுத்தம் நகரில் உள்ள அவரது வீட்டில் தங்கியுள்ளார். கடந்த 20-ம் தேதி கணவர் ம.நடராசனின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, விளார் சாலையில் உள்ள அவரது நினைவிடத்துக்கு சென்று சசிகலா அஞ்சலி செலுத்தினர். பின்னர், மீண்டும் தஞ்சாவூரில் தனது வீட்டில் தங்கிய சசிகலா, இன்று காலை 7.10 மணிக்கு ராகு காலம் தொடங்குவதற்கு முன்பாக வீட்டில் இருந்து, கும்பகோணம் பகுதிகளில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் தரிசனம் செய்ய புறப்பட்டார். முதலில், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்தார். அப்போது அங்குள்ள மங்களம் என்ற பெண் யானைக்கு வாழைப்பழம் வங்கி ஆசிபெற்றார்.
தொடர்ந்து வைணவத் தலங்களான சாராங்கபாணி, சக்கரப்பாணி கோயில்களில் தரிசனம் செய்தார். பின்னர், நவக்கிரகத் தலங்களான திருமங்கலக்குடியில் உள்ள சூரியானார்கோயிலிலும், கஞ்சானூரில் உள்ள சுக்கிரன் கோயில்களில் தரிசனம் செய்தார்.
பின்னர் திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாத சுவாமி கோயிலுக்கு சென்ற சசிகலா, ராகு பெயர்ச்சி பூஜைகள் அமர்ந்து ராகுபகவானை வழிப்பட்டார். அங்கிருந்து அய்யவாடியில் உள்ள பிரதியங்கார தேவி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு, மீண்டும் தஞ்சாவூருக்கு திரும்பினார்.
சசிகலா சென்று வழிபட்ட அனைத்து கோயில்களிலும் இன்று சிறப்பு ஹோமம், சிறப்பு அர்ச்சனைகள் சசிகலா சார்பில் நடைபெற்றது. முன்னதாக, திருவிசநல்லுார் பகுதியில், காரில் சென்றுக்கொண்டிருந்த போது அவரது ஆதரவாளர்கள் பலரும் கையசைத்த நிலையில், காரை விட்டு இறங்கி அங்குள்ளவர்களிடம் நலம் விசாரித்தார். அப்போது, அங்கு வந்த மாற்றுதிறனாளி பெண் ஒருவரிடம் அவரது குடும்ப சூழல் குறித்து கேட்டறிந்து, நலம் விசாரித்தார் சசிகலா.